பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது, நேர்காணல் ஒன்றில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியது வெவ்வேறாக இருப்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

Continues below advertisement

பராசக்தி இசை வெளியீட்டு விழா

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் பராசக்தி படம் உருவாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான 100வது படமாகும். இப்படியான சிறப்புகளைக் கொண்ட பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 14 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 3ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

Continues below advertisement

சிவகார்த்திகேயன் கொடுத்த விளக்கம்

இதனிடையே நடிகர் விஜயின் கடைசிப் படமான ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் நிலையில், அதனை எதிர்த்து பராசக்தி வெளியாவது பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. இதற்கு இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பதிலளித்தார். அதாவது, “பராசக்தி படம் ஆரம்பிக்கும்போது அதன் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் அக்டோபர் அல்லது டிசம்பரில் படம் ரிலீஸ் என்று தான் பேசினார். அப்போது அக்டோபரில் விஜய் படம் வெளியாகும் என கூறப்பட்டதால், பராசக்தி பொங்கலுக்கு வெளியாகும் என கூறினார்.

ஆனால் விஜயின் ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டதால் நான் ஆகாஷிடம் தேதியை மாற்றலாமா என கேட்டேன். அதற்கு அவர் இல்லை, ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. இப்படத்துக்காக பலரும் முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே மாற்ற முடியாது என கூறினார். உடனடியாக நான் விஜய் உதவியாளர் ஜெகதீஷிடம் பேசினேன். விஷயத்தை சொல்லி, விஜயின் கடைசிப்படம், அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுச் சொல்லுங்கள் என கூறினேன். 

சிறிது நேரத்தில் ஜெகதீஷ் என்னை அழைத்து விஜய்க்கு எந்த பிரச்னையும் இல்லை. பொங்கலுக்கு பராசக்தி வரட்டும். சிவகார்த்திகேயனுக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள்’ என கூறினார். இது தான் நடந்த உண்மை. இதை வைத்து சிலர் காமெடியும், சிலர் வன்மமும், சிலர் வியாபாரமும் பண்றாங்க” என தெரிவித்தார். இதனால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது. 

தயாரிப்பாளர் சொன்னது என்ன?

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், “இந்த படம் தொடங்கும்போதே பொங்கல் என்று தான் அறிவித்தோம். ஏப்ரல் 2024ல் படத்தை தொடங்கினோம். அதிலிருந்து 6 மாதம் கழித்து தான் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்தது. ஒரு 8 மாதம் ஷூட்டிங் பிளான் பண்ணினோம். சரியாக 2026 பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணலாம் என நினைத்தோம். மிகப்பெரிய விடுமுறை இருக்குது என முதல் நாளே முடிவு செய்து விட்டோம். இரண்டு வருடத்திற்கு முன்பே எடுத்த முடிவு. திடீரென மாற்றவில்லை” என கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் சண்டையை சமாளிக்க சிவகார்த்திகேயன் நடந்ததை மாற்றி சொல்கிறாரா என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.