சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்த பலரில் மிக முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக திரையில் அறிமுகமான சிவகார்த்திகேயன் பின்னர் தொகுப்பாளராக, துணை நடிகராக படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 

 

 


 

நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை திரை ரசிகர்கள் கண்கூடாக பார்த்துள்ளனர். அவர் அசாத்தியமான திறமையாளர் என்பதை காட்டிலும் அவரின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் இந்த அளவுக்கு வளர்ச்சியை கொடுத்துள்ளது. தன்னுடைய காமெடியை முன்னிறுத்தி கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன் பின்னர் அனைத்து தரப்பு ரசிகர்களின் விருப்பமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்த பிறகு தற்போது அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வருகிறார். 

 

சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாவீரன் மற்றும் அயலான் படங்களை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'அமரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் புவன் அரோரா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இதுவரை நடித்துள்ள படங்களில் இந்த படம் தான் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஆக்ஷனில் தெறிக்க விட்டுள்ளார் என்பது சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மூலம் நிரூபனமானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை  படக்குழு வெளியிட்டு இருந்தது.

 

அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.  





 

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அது தவிர வேறு சில முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.