தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி நடிகராக பல படங்களில் நடித்து இன்று தமிழின் முன்னணி கதாநாயகனாக உருவெடுத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன்.
அமரனை தேர்வு செய்தது ஏன்?
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தை உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் அமரன் படத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, குருதிப்புனல் படம் எல்லாம் புனை கதைகள். இது அது அல்ல. இந்த கதை ஏன் இப்படி போச்சு என்று கேட்கவே முடியாது. இந்த வீரருக்கு ( மேஜர் முகுந்தன்) நிகரான வீரம் வீட்டிலும் ( மேஜர் முகுந்தனின் மனைவி) இருக்க வேண்டும். அவரைப் பற்றிய கதையும் இது. இது நிஜம், இது நமக்காக நிகழ்ந்த நிஜம். இந்த கதையை நாங்கள் தேர்வு செய்தோம் என்று கூற முடியாது. இது நிகழ்ந்து விட்டது. நாங்கள் இதை கண்டெடுத்ததில் பெருமை கொள்கிறோம். இதில் எங்களுக்கு பங்கு என்னவென்றால் கடமையைச் செய்துள்ளோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
தீபாவளி விருந்தாக ரிலீஸ்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்தன் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர்களுடன் புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷ்யாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மையான சம்பவத்தை அடிப்படையான கதையில் முழு ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்துள்ளார். இதன் காரணமாகவும், இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டடமாக திரையரங்கில் வெளியாக உள்ளது.