அமரன்


ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப் பட்டுள்ளது. நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 


போர் செல்லும் வீரன்


அழகும் அமைதியும் கொண்ட காஷ்மீர் மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் போர் ஏற்படுத்து பாதிப்புகளை எடுத்துகாட்டும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவில் சிறப்பே உலக நாயகன் கமல்ஹாசன் குரலில் அமைந்துள்ள போர் செல்லும் வீரன் பாடல் தான். போர் செல்லும் வீரன் ஒவ்வொருவனும் ஒரு தாயின் மகன் தான். இந்த தாயில் யார் இறந்தாலும் ஒரு தாய் ஒரு மகனையே இழக்கிறாள் என்று கமலின் குரலில் போரின் கொடூர முகத்தை எடுத்து காட்டுகிறது இந்தப் பாடல்.






வீடியோ வெளியிட்ட காரணம் என்ன


 நேற்று ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியது சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன்  ' நான் திறமையுள்ள இயக்குநர்களை அடையாளப் படுத்துகிறேன். அதற்கான இவர்களை நான் தான் வளர்த்துவிட்டேன். நான் தான் வாழ்க்கை குடுத்தேன் என்று எல்லாம் சொல்ல மாட்டேன். என்னை அப்படி சொல்லி சொல்லி தான் பழக்கிவிட்டார்கள்" என்று பேசியிருந்தார்.


சிவகார்த்திகேயன் பேசியது தனுஷை குறிப்பிட்டுத்தான் என்று சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராஜ்கமல்  நிறுவனம் அமரன் படத்தின் சிறப்பு மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்று சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.