சிதை


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த இயக்குனர் கார்த்திக் ராம் இயக்கத்தில் பிஜு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட குறும்படம் தான் சிதை. பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இக்குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது இக்குறும்படம். அதுமட்டமல்லாமல், இக்குறும்படம் இதுவரை சுமார் 600-க்கும் மேற்பட்ட  விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளுக்கு இக்குறும்படம் சென்று விருதுகளை குவித்திருக்கிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த குறும்படம் விருதுகளை பெற்றுள்ளது.


பெண் உறுப்பு சிதை


இந்நிலையில் இந்த குறும்படம் தற்பொழுது முழு நீள திரைப்படமாக தயாராகியுள்ளது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர்கள் பார்த்திபன் மற்றும் ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.


பெண்கள் பல துறைகளில் உயர்ந்து விட்டாலும், இன்றும் பெண்களுக்கு எதிரான பெண் உறுப்பு சிதை உள்ளிட்ட பல கொடுமைகள் நவீன உலகத்திலும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். ‘சிதை’ போன்ற படங்கள் வந்தால் மட்டுமே இந்த கொடுமைகள் உலகத்திற்கு தெரியவரும். அப்பொழுதுதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பெண்களுக்கு உண்மையான விடியல் பிறக்கும் எனக் கூறுகிறார் இயக்குனர் கார்த்திக் ராம் 


 600-க்கும் மேற்பட்ட விருதுகள் 


இயக்குனர் கார்த்திக் ராம் மேலும் கூறுகையில், "சிறந்த திரைக்கதை, சிறந்த கதை காலத்திற்கு விருதுகள், சிறந்த குறும்படம் விருதுகள், சிறந்த இயக்குனர்  உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட விருதுகளை பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளோம். பெண்களுக்கு எதிராக பல ஆண்டு காலமாக நடந்து வரும் கொடுமையை, குறும்படமாக எடுத்தது மட்டுமில்லாமல் தற்பொழுது அதை முழு நீள திரைப்படமாகவும் எடுத்து உள்ளோம். முழு நீள திரைப்படம் தயாராகி வெளியிட்டு விழாவிற்காக காத்திருக்கிறது.






இந்நிலையில் இன்று எங்கள் திரைப்படத்தின்,  முதல் தள போஸ்டரை வித்தியாசமாக சிந்தித்து மக்களை சிந்திக்க வைக்கிற  இயக்குநர் பார்த்திபன் ,  சமுதாயத்துக்காக குரல் கொடுக்கும் நடிகர் ஆரி அர்ஜூனன், அங்கி நிறுவனர் தன்ராஜ்  செல்ஃபி மற்றும் க்ரியேஷன்ஸ் சி. கணேஷ்குமார் இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த சிதை திரைப்படத்தின் முதல் தள போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். விரைவில் இத்திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியிட உள்ளோம். 


சிதை என்றால் என்ன ?


இதுகுறித்து கார்த்திக் ராம் நம்மிடம் பேசுகையில், கூகுளில் தற்செயலாக பார்த்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு பெண்களுக்கு நடத்தப்படும் கொடூரத்தை பற்றி தெரிந்து கொண்டேன். இன்னும் சில நாடுகளில்  இது போன்ற சடங்குகளில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன், இதனை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது. பல்வேறு நாடுகளில் 5-இல் இருந்து 7 வயதுக்கு உள்ளாக இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைவு என்ற சடங்கு, பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரிஸ் என்ற உணர்வு முடிச்சை அடியோடு அறுத்து விடுவார்கள்.






அது ஆண்களுக்கான இடம் என்றும் பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்கக்கூடாது என இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவார்கள். திருமணம் முடிந்து முதல் உடலுறவின்போது பெண்ணின் கணவன் மூடப்பட்ட பிறப்புறுப்பில் போடப்பட்ட தையல்களை வெட்டி விட்ட பிறகு உடல் உறவில் ஈடுபடுவார். சில சமயங்களை அந்த தையல் ஏதாவது விட்டிருந்தால் அந்தப் பெண் ஒழுக்கம் கெட்டவளாக நடத்தப்படுவாள் இதை அடிப்படையாக வைத்து திரைப்படத்தை இயக்கியதாக கூறுகிறார் கார்த்திக் ராம் .