Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் தவறை மறைக்க விஜயா எடுத்த முடிவே, முத்துவின் வாழ்க்கையை மாற்றியதாக ப்ரோமா வெளியாகியுள்ளது.
வெளியானது முத்துவின் ரகசியம்
தனியார் தொலைக்காட்சியில் எதார்த்தமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி, டிஆர்பியில் அசத்தி வரும் நெடுந்தொடர் சிறகடிக்க ஆசை. குடும்பத் தலைவிகளை தாண்டி வீட்டில் உள்ள ஆண்களையும், இந்த சீரியல் வெகுவாக கவர்ந்துள்ளது. காரணம் இதில் இடம்பெற்றுள்ள முத்து எனும் கதாபத்திரம் மிகவும் இயல்பாக சித்தரிக்கப்பட்டு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பதே ஆகும். கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், முத்துவை அவனது அம்மா விஜயா எதற்காக இப்படி வெறுத்து ஒதுக்குகிறார்? என்பதே ரசிகர்களின் தீவிரமான கேள்வியாக உள்ளது. அதற்கான பதிலை கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வரும் எபிசோட்கள் மெல்ல மெல்ல வழங்கி வருகின்றன.
முத்துவை சிதைத்தை மூடநம்பிக்கை:
குழந்தை பருவம் முதலே தனது தாய் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருக்கும் முத்து, அவருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் உயிரை கொடுத்தேனும் காப்பாற்ற வேண்டும் என துடிக்கிறார். ஆனால், முத்து எவ்வளவு பாசத்தை கொட்டிக் கொடுத்தாலும், அவனை தனது மகன் என்பதை தாண்டி மனிதனாக கூட மதிக்க விஜயா மறுத்து வருகிறார். இது ஏன்? அப்படி முத்து என்ன தவறு செய்தார்? என பல நாட்களாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ரோகிணியின் மகன் க்ரிஷ் மூலமாக ஏற்பட்ட பிரச்னையால், முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தனது இளமைக்காலத்தை கழித்த உண்மையை மனோஜ் மூலமாக மீனா அறிகிறார். இதையடுத்து, இளம் வயதில் நடந்தது என்னவென மீனா கேட்க, விஜயாவின் மூடநம்பிக்கை தனது வாழ்க்கையை எப்படி அழித்தது என முத்து விளக்கியுள்ளார்.
விஜயாவின் விபரீத முடிவு?
முத்து சொல்லும் கதையில், ஆரம்பத்தில் விஜயாவின் செல்லப்பிள்ளையாக முத்து தான் இருந்துள்ளார். ஆனால், வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்கள் தொடர்பாக ஜோசியர் ஒருவரை சந்திக்கும்போது, இரண்டாவது மகனால் வீட்டில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிந்து விஜயா அதிர்ச்சியடைகிறார். இதற்கு ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா? என கேட்க, முத்துவை ஆறு ஆண்டுகளுக்கு விஜயா பார்க்காமல் பிரிந்து இருக்க வேண்டும் என ஜோசியர் எச்சரிக்கிறார். ஆரம்பத்தில் தயங்கினாலும் குடும்பத்தின் நலனை கருதி, முத்துவை அவனது பாட்டியின் வீட்டில் விட விஜயா முடிவெடுக்கிறார். அப்படி முத்துவை அங்கே விட்டு வரும்போது அவன் அழுவதை கண்டு, விஜயாவும் மனமுடைந்து கதறி அழுகிறார்.
வேறு வழியின்றி அங்கே இருந்து விஜயா வந்தாலும், முத்துவின் நினைப்பால் தவித்து அவனை பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறார். இதுகுறித்து மீண்டும் ஜோசியரை பார்க்க செல்லும்போது, அங்கு இருந்து வெளியேறிய பெண் ஒருவர் ஜோசியர் கூறியதை நம்பி பின்பற்றாததால் தனது மகனை இழந்துவிட்டதாக அழுதபடி செல்கிறார். இதையடுத்து உள்ளே சென்று ஜோசியரிடம் தனது ஆசையை வெளிப்படுத்த, நிச்சயமாக முத்துவை பார்க்கவே கூடாது என விஜயாவை எச்சரிக்கிறார்.
மனோஜ் செய்த தவறு?
இன்றைய எபிசோட் ஜோசியர் வீட்டுடன் முடிந்தாலும், அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில், சற்றே வளர்ந்த முத்து தனது வீட்டிற்கு வந்தபோது விஜயா அவனை முற்றிலுமாக வெறுப்பதை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், செய்யாத தவறுக்காக முத்துவை போலீசார் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்துச் செல்ல முற்படுகின்றனர். அதனை அவனது தந்தை அண்ணாமலை தடுக்க முயன்றாலும், இவனெல்லாம் அங்கு சென்றால் தான் திருந்துவான் என விஜயா வெறுப்புடன் பேசுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதேநேரம், தான் எந்த தவறும் செய்யவில்லை என முத்து கதறுகிறார்.
வெள்ளிக்கிழமை எபிஷோடில் முத்துவின் வாழ்க்கை நாசமாய் போனதற்கு, விஜயா மற்றும் மனோஜ் தான் காரணம் என அண்ணாமலை கூறியிருப்பார். இன்றைய ப்ரோமோவிலும் தான் எந்த தவறும் செய்யவில்லை என முத்து கதறுகிறார். இதனை பார்க்கும்போது, மூடநம்பிக்கையால் முத்துவின் மீது ஏற்பட்ட வெறுப்புக்கு மத்தியில், மனோஜ் செய்த ஏதோ ஒரு தவறுக்கு முத்து பலிகடா ஆக்கப்பட்டதை போன்றே தெரிகிறது. இதுகுறித்து அடுத்த வார எபிஷோட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன? முத்துவை விஜயா இந்த அளவிற்கு வெறுக்க காரணம் என்ன? மனோஜ் செய்த தவறு என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.