தமிழ் சினிமாவில் கானா இசையை மீண்டும் பிரலமாக்கியதில் கானா பாலா முக்கியமானவர். 2000 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் கானாப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்திய காலம். ஒரு படத்தில் ஒரு கானாப் பாடலாவது இருந்தாக வேண்டியக் கட்டாயம் உருவாகியது. இதனை உருவாக்கியவர் இசையமைப்பாளர் தேவா. கவலப்படாதே சகோதரா. வைட்டு லகான் கோழி ஒன்னு கூவுது, என எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார் தேவா. தேவாவுக்குப் பின் கானாப் பாடல்கள் தமிழ் சினிமாவில் இருந்து கிட்டதட்ட மறைந்தே விட்டன. அதனை மீட்டுக் கொடுத்தவர் கானா பாலா
கானா பாலா
1971 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தார் கானா பாலா என்கிற பால முருகன். தனது இளமைக் காலத்தில் இருந்தே கானா பாடுவதில் ஆர்வம் கொண்ட பாலா, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கானா குயில் பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் பரிசை வென்றார். ஒரு பக்கம் கானா பாடல்களைப் பாடிவந்தாலும் மறுபுறம் வழக்கறிஞராக இருந்து வருகிறார் கானா பாலா.
ஆடி போனா ஆவணி
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த அட்டகத்தி திரைப்படத்தில் ‘நடு கடடுல’ மற்றும் ’ஆடி போனா ஆவணி” ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார் பாலா. இந்தப் பாடல்கள் தமிழ் சினிமாவில் கானா பாடல்களின் மறுவருகையாக அமைந்தன. இந்த இரு பாடல்களுக்கும் பாடல் வரிகளை எழுதியவர் கபிலன். அதுவரை கவித்துவமான பாடல்களை எழுதிவந்த கபிலனுக்கு இப்படி ஒரு முகம் இருப்பதே யாரும் எதிர்பார்த்திராதது.
ஓரக் கண்ணால
உதயம் என்.எஹ்.4 திரைப்படத்தில் ஜீ.வி பிரகாஷ் குமார் இசையில் ஓரக் கண்ணால என்கிறப் பாடலைப் தானே எழுதி பாடினார் கானா பாலா. இந்தப் பாடல் காட்சியில் நடித்தும் இருந்தார் கானா பாலா. இந்தப் பாடலுக்குப் பின் திரைப்படங்களில் கானா பாலா வந்து ஒரு பாடலை பாடிவிட்டுச் செல்வது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது.
பாலா பாடிய ஹிட் பாடல்கள்
சூது கவ்வும் திரைப்படத்தில் காசு பணம் துட்டு என்று கானா பாலா பாடியப் பாடல் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. வாழ்க்க ஒரு குவாட்டர், ஆத்தங்கர ஓரத்து முன்னால, காகிதக் கப்பல் , டோண்ட் வரி எனத் தொடர்ச்சியாக குதுகலமானப் பாடல்களைப் பாடினார் கானா பாலா. 2014 ஆம் ஆண்டில் மட்டுமே கிட்டதட்ட 45 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் கானா பாலா. இன்று தனது 53 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கானா பாலா. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.