பாடகர் பென்னி தயாள்  பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரது தலை மீது ட்ரோன் கேமரா மோதிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகர்களில் ஒருவர் பென்னி தயாள். இவர் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி மற்றும் மராத்தி  என பல மொழிகளில்  3500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 


சென்னையில் உள்ள விஐடி கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியில் பென்னி தயாள் பங்கேற்று பாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பறந்து கொண்டிருந்த ​​​​ட்ரோன் கேமரா திடீரென அவரது தலையின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் ஏற்பட்ட காயம் காரணமாக பென்னி தயாள் மேடையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அதேசமயம் இசை நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 






இதனிடையே தனது உடல்நலம் குறித்து  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பென்னி தயாள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கல்லூரியில் நடந்த சம்பவம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. ட்ரோனின் இறக்கை தனது தலையின் பின்புறத்தில் தாக்கியதாகவும், அதனை தடுக்க முயன்றப்போது இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனவே இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்முறை ட்ரோன் ஆபரேட்டர்களை வேலைக்கு அமர்த்துமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


மேலும் அனைத்து கலைஞர்களும் தங்களது ஒப்பந்தங்களில் ஒரு விதிமுறையைச் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார். அதாவது, ட்ரோன் கேமராக்கள் உங்களை நெருங்க முடியாததை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதேபோல் நாங்கள் அனைவரும் கலைஞர்கள். மேடையில் பாடுகிறோம். இது விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படம் அல்ல என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். எனவே வழக்கமான ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள் எனவும் பென்னி தெரிவித்துள்ளார்.