இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கோகுல். தற்போது ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'சிங்கப்பூர் சலூன்' படத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மிகவும் ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக நடித்துள்ளார். இப்படம் மூலம் சிகையலங்காரம் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இழிவாக பேசக்கூடாது என்றும் அவர்கள் விருப்பமான தொழிலை மிகவும் ஃபேஷனாக செய்து பல லட்சங்களை சம்பாதிக்கிறார்கள் என்ற கருத்தை படத்தின் மூலம் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் இயக்குநர் கோகுல் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ”இணையத்தில் சினிமா பற்றி விமர்சனம் செய்பவர்கள், சினிமா செய்திகளை பேசுபவர்கள் கிண்டலாக சிரித்து கொண்டே பேசி பலரின் வாழ்க்கையையும் காலி செய்து விடுகிறார்கள். அது போல அவர்கள் செய்ய வேண்டாம்” என கோரிக்கை வைத்துள்ளார். ”சினிமாவை வைத்து தான் பலரின் பிழைப்பே ஓடுகிறது. அப்படி இருக்கையில் சினிமா நன்றாக ஓடினால் தான் அதை பற்றி பேச முடியும். எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் தான் சிங்கப்பூர் சலூன் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என சிரித்து கொண்டே திரை விமர்சகர்கள் கூறியது என்னுடைய மனதை மிகவும் காயப்படுத்தியது. அப்படி உண்மையிலேயே ஏதாவது பிரச்சனை இருந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக போன் செய்து கேட்டு விசாரித்து கொள்ளலாம். ஒரு வேலை உண்மையிலேயே அவர்களுக்குள் ஏதாவது கசப்பான அனுபவம் நடைபெற்று இருந்தால் அதை இப்படி பொதுவில் சொல்லும் போது அது சம்பந்தப்பட்டவர்கள் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை நான் அவர்களிடம் கோரிக்கையாக கேட்கிறேன்” என்று கூறியுள்ளார்