நடிகர் விஜய்யின் நடனத்திற்காக மட்டுமே அவருக்கு பெரும் ரசிகராக இருப்பவர்கள் இங்கு ஏராளம். குறிப்பாக அவரது படங்களில் வரும் ஹீரோ இண்ட்ரோ பாடல்கள் தனி ரகம்! இப்போது வரும் படங்களில் எல்லாம் ஒரு பாடலின் கடைசி நிமிடம் முழுவதும் விஜய் செம்மயான குத்தாட்டம் போடும் காட்சிகள் இடம்பெறுகின்றன.


விஜய் தனியாக ஆடுவதைப் பார்ப்பது ஒரு சந்தோஷம் என்றால், அவரது பாடல்களுக்கு கெளரவத் தோற்றத்தில் முன்னணி நடிகைகள் ஆடுவது இன்னும் உற்சாகமூட்டும் விஷயம். அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் படங்களில் நடிகைகள் கெஸ்டாக வந்து உற்சாக நடனமாடிச் சென்ற பத்து சூப்பர் ஹிட் பாடல்களைப் பார்க்கலாம்!


வில்லு



போக்கிரியின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரபுதேவா மற்றும் விஜய்யின் கூட்டணியில் வெளியான இரண்டாவது படம் வில்லு. டி.எஸ் .பி இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற ராமா ராமா பாடலில் விஜய்யுடன் இணைந்து சரியான ஆட்டம் ஒன்றை போட்டிருப்பார் நடிகை குஷ்பு. இதில் குஷ்பு பாடிய வரிகளுக்கு நடிகை கோவை சரளா குரல் கொடுத்திருந்தார். 


குருவி



கில்லி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் தரணி இயக்கிய குருவி படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலில் நடிகை மாளவிகா கெஸ்டாகத் தோன்றியிருப்பார்.


திருப்பாச்சி



அண்ணன் தங்கச்சி சென்டிமென்டில் சக்கைபோடு போட்ட திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற “கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்ததம்மா” பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. இந்தப் பாடலில் சாமி வந்தவராக சூலாயுதத்தை தூக்கிக் கொண்டு ஆடியிருப்பார், திருடா திருடி புகழ் கதாநாயகியான சாயா சிங்.


சுக்கிரன்



இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் திரைப்படத்தில் கெளரவத் தோற்றத்தில் தோன்றியிருப்பார் நடிகர் விஜய் அதே படத்தில் இடம்பெற்ற சாத்திக்கடி என்கிற பாடலில் வந்து விஜய்யுடன் கலக்கல் டான்ஸ் ஆடியிருப்பார் ரம்பா.


திருமலை


அழகூரில் பூத்தவளே என்கிற அழகான பாடல் திருமலை படத்தில் இருக்கிறதுதான். அதே படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்கிற பாடல் இருக்கிறது இல்லையா.... அதில் விஜய்யுடன் வந்து நடனமாடினார் அன்றைய பிரபல நடிகை கிரண்.


குஷி



எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த குஷி திரைப்படத்தின் கதாநாயகனின் கலக்கலான அறிமுகப் பாடல் ‘மெக்கரீனா’. இந்த முறை தமிழில் இல்லாமல் நேரடியாக பாலிவுட் அழகி ஷில்பா ஷெட்டியை அழைத்து வந்தார்கள். 


சிவகாசி



சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா என்கிற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடினார் இன்றைய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.


நெஞ்சினிலே



 நெஞ்சினிலே படத்தில் விஜய்யின் குரலில் அமைந்த ‘தங்க நெறத்துக்கு’ பாடலில் நடிகை ரோஜா கெஸ்ட்டாக வந்தார். இந்தப் பாடலில் நடிக்கும்போது தமிழில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார் ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது.


ஷாஜஹான்



விஜய் கடைசிவரை ஒருதலைக் காதலனாக இருக்கும் ஷாஜஹான் திரைப்படத்தில் ‘சரக்கு வெச்சிருக்கேன்’ என்ற குத்துப்பாடலுக்கு நடிகை மீனா கேமியோ செய்தார். திரையில் தாங்கள் ஜோடியாக படம் நடிக்க வேண்டும் என நீண்ட காலமாக நடிகர் விஜய் - நடிகை மீனா இருவருமே ஆசைப்பட்ட நிலையில், இறுதியாக ஒரு பாடலுக்கு இணைந்து நடமாடியதோடு இவர்களது ஆசை பாதி நிறைவேறியது.


யூத்



பாடலாகவும் சரி, நடனமாகவும் சரி எல்லா காலமும் ரசிகர்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து வைத்திருக்கும் படம் ஆல்தோட்ட பூபதி  பாடலில் விஜயும் சிம்ரனும் சேர்ந்து ஆடிய ஆட்டம் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியுமா என சொல்லுங்கள்.