கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.
‘மாநாடு’ படத்தின் வெற்றி, சிம்புக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தந்தது வெங்கட் பிரபு - சிலம்பரசன் - எஸ்.ஜே. சூர்யா - யுவன் கூட்டணியில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்ரீட்டை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.
முத்து என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தக் கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். முன்னதாக இந்தப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில்தான் தற்போது படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.
கோகுல் இயக்கத்தில் சிம்பு ’கொரோனா குமார்’ என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் வட சென்னை இளைஞராக சிம்பு வலம் வருவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா, ரௌத்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்தான் ‘கொரோனா குமார்’ படத்தின் இயக்குநர் கோகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘ சுமார் மூஞ்சு குமார்’ என்ற விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. இதனை அடிப்படையாக கொண்டுதான் ‘கொரோனா குமார்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.