'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் மார்க்கெட் ட்ரிபிள் மடங்கு எகிறிவிட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


ஹெச். வினோத் - கமல் கூட்டணி :


ஹெச். வினோத் இயக்கும் KH 233 படத்தில் விரைவில் இணைய உள்ளார் கமல்ஹாசன். இப்படத்தில் ராணுவ வீரராக நடிக்க உள்ளார் என வெளியான தகவலை உறுதிப்படுத்தும் வகையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அடுத்த மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு துவங்கியதும் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


 



பிரபாஸுக்கு வில்லன் :


மேலும் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் கல்கி 2898 திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்றும் அதற்காக கிட்டத்தட்ட 150 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்துள்ளதால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை கமல்ஹாசன் முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி :


மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி KH 234 திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள். அடுத்த ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படும் நிலையில் 2025ம் ஆண்டு தான் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க மறுத்ததால் அவருக்கு பதிலாக நடிகர் துல்கர் சல்மானை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. 


 


 



சிம்பு மறுத்த காரணம் :


தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் STR 48 வரலாற்று பின்னணியில் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நடிகர் சிம்பு. வரலாற்று சிறப்பு மிக்க கதைக்களம் என்பதால் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் காட்சி அளிக்கிறார் சிம்பு.


அவரின் இந்த தோற்றம் KH234 படத்திற்கு செட்டாகாது என்பதால் நிராகரித்துள்ளார். KH234 திரைப்படத்தில் நடிகர் சிம்பு இளம் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு அவரின் தற்போதைய கெட்டப் சரி வராது என்பதால் விலகியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இருப்பினும் சிம்புவின் STR48 படத்தில் கமல்ஹாசன் இருப்பார் என்பது உறுதி என காத்துவாக்கில் தகவல் பரவி வருகிறது.