மாநாடு படத்தின் 5 மணி காட்சி ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், திரையரங்குகள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சமீபத்தில் அமல்படுத்தியது. அதனடிப்படையில் திரையரங்குகளுக்குச் செல்வோர் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும் இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதமும் எழுதியிருந்தார். எது எப்படி இருந்தாலும் மாநாடு இன்று வெளியாகும் என சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில் மாநாடு ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனால் மாநாடு படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர்.இந்த நிலையில்தான் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு படம் திட்டமிட்டப்படி மாநாடு படம் வெளியிடப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனால் நேற்று இரவு முதலே சிம்புவின் ரசிகர்கள் மாநாடு படத்தின் காலை காட்சியை பார்க்க ஆவலுடன் திரையரங்குகளில் காத்திருந்தனர்.
ஆனால் 5 மணி காட்சி ரத்தாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரையரங்கு வாசல்களில் காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில் படம் சொன்னபடி ரிலீசாகும் என்றும், படம் பிரசினையை கடந்து விட்டதாகவும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் மாநாடு படம் 7 மணிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது