தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , த்ரிஷா , நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நாயகன் படத்தைத் தொடர்ந்து கமல் மணிரத்னம் கூட்டணி 38 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்திற்கு கமல் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. கமலின் மகனாக சிம்பு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தனது கம்பேக் படமாக இருக்கும் என சிம்பு தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிக்க இருக்கும் படங்கள்

தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த புது இயக்குநர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார் சிம்பு. பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு எஸ்.டி.ஆர் 49 படம் உருவாக இருக்கிறது. கயடு லோகர் நாயகியாக நடிக்க சந்தானம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பும் முன்னதாக வெளியாகியுள்ளது. மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு வரலாற்று திரைப்படம் ஒன்றில் நடிப்பதோடு இந்த படத்தை அவரே தயாரிக்கவும் இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் சிம்பு மூன்றாவது முறையாக மணிரத்னம் கூட்டணியில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு 

மணிரத்னம் இயக்கத்தில் முன்னதாக செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார் சிம்பு. தற்போது தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து உடனே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. முழுக்க முழுக்க ரொமாண்டிக் ஜானரில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது