விஜயலட்சுமி..
ஆந்திர பிரதேச மாநிலம் ஏலூரு பகுதியில், 1960-ஆம் ஆண்டு பிறந்தவர்தான் இந்த விஜயலட்சுமி. 1970-ஆம் ஆண்டுகளில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவருக்கு, 14 வயதில் பெற்றோர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.சிறுவயதிலேயே கட்டாயத்தின் பேரில், திருமணமாகி, சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மணமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் அந்தத் திருமண வாழ்க்கையில், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மாநிலம் விட்டு ஓடிவந்து நடிகை ஆகவேண்டும் என்ற கனவை வளர்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.சென்னைக்கு வந்ததும் முதலில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும்போது, டச்-அப் செய்பவராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பெயர் வராத அளவுக்கு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் ஆங்காங்கே தோன்றியுள்ளார். அந்த நேரத்தில், சில்க் ஸ்மிதாவை ஒரு நடிகையாக அறிமுகம் செய்தவர், பிரபல தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்திதான். ஏவிஎம் வாசலில் சில்க் ஸ்மிதாவை பார்த்த வினுசக்கரவர்த்தி, தான் இயக்கிய 'வண்டிச்சக்கரம்' என்கிற திரைப்படத்தில் சிலுக்கு சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தை கொடுத்தார்.
சிலுக்கு..
அந்த படத்தில் அவர் பெயர்தான் சிலுக்கு. தன்னுடைய திரை பெயரை ஸ்மிதா என மாற்றிக்கொண்ட விஜயலட்சுமி, முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டார். 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தான் இல்லாமல் தமிழ் சினிமாவா எனப் பீக்கில் பயணித்த சில்கின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இல்லை.பல்வேறு மன உளைச்சல்களில் சிக்கித்தவித்த சில்க் ஸ்மிதா, 1996ம் ஆண்டு அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவரது மரணம் முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில் மரணத்துக்கு முன்பு சில்க் எழுதியதாக தெலுங்கில் எழுதப்பட்ட கடிதம் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடிதம்..
அதில்,“நடிகையாக உருவாக நான் எவ்வளவு கடினமாக உழைத்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். யாரும் என்னை நேசிக்கவில்லை. பாபு (டாக்டர் ராதாகிருஷ்ணன்) மட்டும் என்னிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொண்டார். எல்லோரும் என் வேலையைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வாழ்க்கையில் எனக்கு நிறைய ஆசைகள் உள்ளன. அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
ஆனால் நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை.எல்லோருக்கும் நல்லது செய்த எனக்கு வாழ்க்கை இப்படியா? கடவுளே, என்ன நியாயம் இது? நான் சம்பாதித்த சொத்தில் பாதியை பாபுவுக்கு கொடுக்க வேண்டும். நான் அவரை மிகவும் நேசித்தேன், உண்மையாகவும் கூட. அவர் என்னை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார் என்று நான் நம்பினேன், ஆனால் அவர் என்னை ஏமாற்றினார். கடவுள் இருந்தால், அவர் (பாபு) கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.