சைமா 2024
தென் இந்திய திரைக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு சைமா. அந்த வகையில் 2024 ஆண்டு சைமா விருது வழங்கு விழா நேற்று செப் 15 ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு இந்த நிகழ்வில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. தமிழ் , தெலுங்கு , கன்னட மொழி திரைப்பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். தமிழ் திரைத்துறை சார்பாக எந்தெந்த நடிகர்கள் விருது வென்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.
ஐந்து விருதுகளை வென்ற ஜெயிலர் திரைப்படம்
கடந்த ஆண்டு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இந்த நிகழ்வில் அதிகப்படியான விருதுகளை வென்றது. சிறந்த இயக்குநருக்கான விருதை நெல்சன் வென்றார். சிறந்த பாடலாசிரியருக்கான விருது ரத்தமாரே பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் வென்றார். சிறந்த காமெடி நடிகருக்கான விருது ஜெயிலர் படத்தில் நடித்த யோகி பாபுவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருதை ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவி வென்றார். கடைசியாக சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் சேர்த்து மொத்தம் ஐந்து விருதுகளை ஜெயிலர் திரைப்படம் வென்றது.
சிறந்த நடிகை (விமர்சகர் தேர்வு)
சிறந்த நடிகைக்கான விருது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடகர்
சிறந்த பாடகருக்கான விருது குட் நைட் படத்தின் நான் காலி பாடலுக்காக ஷான் ரோல்டனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் விக்ரம்
சிறந்த நடிகருக்கான விருது பொன்னியின் செல்வரன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அறிமுக இயக்குநர்
கடந்த ஆண்டு அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதினை வென்றார்.
சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த ஓளிப்பதிவாளருக்கான விருதினை தேவி ஈஸ்வர் பெற்றார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்திற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகை
சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை சரிதா வென்றார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை
அன்னபூரணி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா வென்றார்.
சிறந்த வில்லன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் ஹரோல்டு தாஸாக நடித்த அர்ஜூன் சிறந்த வில்லனுக்கான விருதை வென்றார்.
சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு)
சிறந்த நடிகர் விமர்சகர் தேர்வு விருதை மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வென்றார்.
சிறந்த இயக்குநர் (விமர்சகர் தேர்வு)
சிறந்த இயக்குநருக்கான விமர்சகர் தேர்வு விருதை சித்தா திரைப்பட இயக்குநர் அருண்குமார் வென்றார்.