பிரபல மலையாளம் இயக்குநர் சித்திக் நேற்று திடீர் மாரடைப்பால் மறைந்த நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யாவுக்கு முக்கியமான படம்
2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, ராதாரவி, வடிவேலு, சார்லி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரபல மலையாள இயக்குநர் சித்திக். விஜய், சூர்யா இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்ததுடன், இருவருக்கும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்தவர் சித்திக். இந்நிலையில் தன் மனதுக்கு நெருக்கமான இயக்குநரின் மறைவு தந்த வருத்தத்தை அறிக்கை மூலம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா.
சூர்யாவின் கடிதம்
“இந்தத் தருணத்தின் எனக்குள் எத்தனையோ நினைவுகள் கிளர்ந்து எழுகின்றன. எனது இதயம் கணக்கிறது. இயக்குநர் சித்திக்கின் மறைவு ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு. இந்த துன்பகரமான சூழ்நிலையில் என்னுடைய ஆதரவை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் பல வகைகளில் எனக்கு முக்கியமான ஒரு படம். ஒரு காட்சியில் நடிகர்கள் செய்யும் சின்ன சின்ன இம்ப்ரூவைசேஷன்களை (improvisation) ஊக்குவிக்கும் குணம் இயக்குநர் சித்திக்கிடம் இயல்பாகவே இருந்தது.
என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு படத்தின் செட்டுக்கு நான் மகிழ்ச்சியாக சென்றேன். என்னுடைய வேலையை ரொமபத் தீவிரமாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல், சிரித்து மகிழ்ந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கும் வழிமுறைகளைஅனுபவிக்க கற்றுக்கொடுத்தவர் அவர்.
ஃப்ரண்ட்ஸ் படம் இயக்கும்போது சினிமாவில் அவர் அதிகம் பாராட்டப்படும் இயக்குநராக இருந்தார். ஆனால் அதை எதுவும் வெளிகாட்டாமல் அவர் அனைவரையும் சமமாக நடத்தினார். படப்பிடிப்பின் போது அவர் சத்தமாக பேசி ஒருமுறைகூட நான் பார்த்ததில்லை.
அவருடன் வேலை செய்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் காத்து வைத்துக் கொள்வேன். என் வாழ்நாளில் என்னிடம் இல்லாத முக்கியமான ஒன்றை நான் அவரைப் பார்த்த பின் கண்டடைந்தேன். என் மீதும், எனது திறமை மீதும் நம்பிக்கை வைக்க அவரை சந்தித்தப் பிறகு தான் நான் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு முறை நாங்கள் சந்தித்துக் கொள்ளும்போதும், அவர் எனது குடும்பத்தைப் பற்றி மிக அக்கறையாக விசாரிப்பார். நாம் பேசுவதை மிகுந்த கவனத்தோடும் கேட்டுவருவார்.
நான் ஒரு நடிகனாக உருவாகி வந்த காலத்தில் என் மேல் நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி சித்திக் . நான் உங்களது இருப்பை மிஸ் செய்வேன். உங்கள் இழப்பை தாங்கிக் கொள்வதற்கான மன உறுதி உங்களது குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் . நீங்கள் எங்களிடம் விட்டுச் சென்றிருக்கும் நல்ல நினைவுகளும் அன்பும் எங்களது பயணத்தில் எங்களுடன் நிச்சயம் தொடரும்“ என்று சூர்யா தெரிவித்துள்ளார்.