சித்தார்த்
நடிகர் சித்தார்த் வருடத்திற்கு ஒரு படம் நடித்து வந்தாலும் இந்த படங்கள் பொதுவெளியில் பெரியளவில் கவனம் ஈர்க்க தவறவிடுகின்றன. கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் அந்த வகையில் ஒரு விதிவிலக்கு. சித்தார்த்தின் கரியரில் மிக முக்கியமான ஒரு படமாக சித்தா திரைப்படம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் சித்தார்த்திற்கு மேலும் சரிவாக அமைந்தது. தற்போது சித்தார்த் நடித்துள்ள மிஸ் யூ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
புதுமுக நடிகையுடன் ஜோடி சேரும் சித்தார்த்
‘மாப்ள சிங்கம்’ மற்றும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படங்களின் இயக்குநர் N.ராஜசேகர் இயக்கியுள்ள படம் மிஸ் யூ. இப்படத்தில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்கு படமாகத் தயாராகியுள்ளது. பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் '7 miles per second' நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஜே.பி, பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கும் நிலையில், ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், நகைச்சுவை மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படம் கலகலப்பாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பின்னணி இசைக்கு பெயர் போன ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக எட்டு பாடல்களை வழங்கியுள்ளார்.களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குநரோடு இணைந்து திரைக்கதையும் அமைத்துள்ளார். வரும் நவம்பர் 19 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
டீசர் எப்படி
பல வருடங்களாக பார்த்து சலித்துப்போன ஒரு டெம்பிளேட் காதல் கதையாக தெரிகிறது மிஸ் யூ படத்தின் டீசர். பெண்ணைப் பார்த்ததும் காதலில் விழும் ஆண், அந்த காதல் சேர்வதில் இருக்கும் பிரச்சனை இடையில் ஆண்கள் பாவம் என்கிற பாணியில் ஒரு பாடல் என அரதப்பழைய காதல் கதை. இன்றைய சூழலில் இளம் இயக்குநர்கள் எல்லா ஜானர்களிலும் புதிய முயற்சிகளை செய்து வரும் நிலையில் மிஸ் யூ படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க தவறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்