பிரபல நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் நீண்ட நாள்களாக காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று இவர்கள் இருவரும் தெலங்கானாவில் ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி காதல்




இயக்குநர் மணிரத்னத்திடம் அசிஸ்டண்ட் இயக்குநராக தன் சினிமா பயணத்தைத் தொடங்கி,  இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சித்தார்த், தொடர்ந்து தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் டாப் நடிகராக உயர்ந்தார்.


மேலும் தென்னிந்திய சினிமாக்கள் தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து கவனமீர்த்த சித்தார்த், நடிப்பு தாண்டி, பாடகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் திறமையாளராக வலம் வந்து தன் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


அதே போல் ப்ரஜாபதி எனும் மலையாள சினிமாவில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி,  2007ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் எனும் தமிழ் படத்தில் நடித்த அதிதி, வெகு விரைவில் பாலிவுட்டில் கால் பதித்து வெற்றிக்கொடி நாட்டினார்.


3 ஆண்டுகளாக டேட்டிங்!


தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் தந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த அதிதி, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.


இதனிடையே சித்தார்த் - அதிதி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்தது முதல் இருவரும் காதலித்து வருவதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், நேரடியாக இருவரும் இதுவரை தங்கள் காதலை உறுதிப்படுத்தவில்லை.


தெலங்கானாவில் இன்று திருமணம்?




ஆனால் இருவரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் டேக் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிட்டும், சினிமா நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருகை தந்தும் தங்கள் ஜோடிப் பொருத்தத்தால் ரசிகர்களை ஈர்த்து இணையத்தில் பேசுபொருளாகி வருகின்றனர்.


இந்நிலையில், இன்று தெலங்கானா மாநிலம், வனபர்தி மாவட்டம், ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் சித்தார்த் - அதிதி இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக டோலிவுட் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,  இன்று மாலை இருவரும் தங்கள் திருமணம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் தகவல் பரவி வருகிறது. சித்தார்த் - அதிதி இருவரின் திருமணம் குறித்த புகைப்படம் கூட இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டாவது திருமணம்


நடிகர் சித்தார்த்துக்கு மேக்னா என்பவருடன் ஏற்கெனவே 2003ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக 2007ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து நடிகை சமந்தாவும் இருவரும் காதலிப்பதாகவும், இருவரும் சில மாதங்களில் ப்ரேக் அப் செய்ததாகவும் தகவல்கள் பரவின. அதன் பின் சித்தார்த் சிங்கிளாக வலம் வந்த நிலையில், தற்போது சித்தார்த் - அதிதி இருவரும் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.