ஷ்ருதி ஹாசன் நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும் அறியப்படுபவர். தனது சிறிய வயதில் இருந்தே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டவர் ஷ்ருதி ஹாசன். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 20 வயதில் தான் எழுதி இசையமைத்த பாடல் ஒன்றை பாடி அந்த வீடியோவை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ஷ்ருதி ஹாசன். யாரும் எதிர்பாராதவிதமாக இந்த வீடீயோவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். அவரது வாழ்த்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


மிக கஷ்டமான காலத்தில் எழுதிய பாடல்


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்த ஷ்ருதி ஹாசன் “இந்தப் பாடலை  நான் என்னுடைய இருபதாவது வயதில் எழுதினேன். என்னுடைய வாழ்க்கையில் மிக சோகமான ஒரு காலகட்டம் அது என்பதால் இந்தப் பாடலை நான் யாரிடமும்  பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது எத்தனையோ ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் என்னுடைய ஒவ்வொரு சின்ன உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதனால் இந்தப் பாடலை நான் இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மேலும் தற்போது நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் . என்னுடைய முதல் ஆல்பத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. அப்போது நான் இதற்கு தமிழ் என்று பெயர் வைத்திருந்தேன். இந்தப் பாடலின் முதல் இரண்டு வரி கவிதைகள் இடம்பெற்றிருந்தது. அதை எழுதியது வேறு யாரும் இல்லை எனது தந்தை கமல்ஹாசன்தான்.” என்று பதிவிட்டுள்ளார் ஷ்ருதி ஹாசன்.






ஹ்ரித்திக் ரோஷன்


இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் தங்களது காதல் தோல்விகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். அப்போது பாலிவுட் நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் இந்தப் பாடலை பாராட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த பதிவு மேலும் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.


ரசிகர் ஒருவர் “ நமது கடந்த கால அனுபவங்கள் எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் அவற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவையும் நம் வாழ்க்கையில் முக்கியமான அனுபவங்களே” என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு நடிகை ஷ்ருதி ஹாசனுக்கு மிகச்சரியாக பொருந்துவதாக அமைந்துள்ளது.  தற்போது பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் பிரபாஸ் நடித்து வரும் சலார் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷ்ருதி ஹாசன்.