கன்னட திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற நடிகராக திகழ்பவர் சிவ ராஜ்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெயில். இந்த படம் கடந்த அக்டோபர் 2ம் தேதி ரிலீசாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
நூலிழையில் தப்பிய சிவராஜ்குமார்:
இந்த நிலையில், இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக நேற்று கர்நாடகவில் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரைக் காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
சிவராஜ்குமார் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியின் உள்ளே வந்ததும் அவரை வரவேற்பதற்காக சட்டென்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. விழா மேடையில் இந்த பட்டாசுகள் வெடிக்கவும், நெருப்பு தீப்பொறிகள் பறக்கவும் மேடை அருகே நடந்து வந்த சிவராஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். அவரது பாதுகாவலர் உடனடியாக அவரைச் சுற்றி அவருக்கு அரண் போல நின்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலரும் அவரைச் சுற்றி நின்று அவருக்கு பாதுகாப்பாக நின்றனர்.
ரசிகர்கள் வேதனை:
ஆனாலும் சில தீப்பொறிகள் அவரின் தலையில் விழுந்தது. ஆனாலும், அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கியுள்ளது. நூலிழையில் சிவராஜ்குமார் எந்த பாதிப்பும் இல்லாமல் நெருப்பில் இருந்து தப்பியதால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
ரசிகர்கள் வரவேற்பு:
எந்த காயமும் இன்றி சிவராஜ்குமார் இந்த பட்டாசு நெருப்பில் இருந்து தப்பிய பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பவன் வதேயர் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து மலையாள பிரபல நடிகர் ஜெய்ராம், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சாய்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.
இந்த படத்தில் தீக்ஷிதா ஷெட்டி, சஞ்சனா, சங்கீதா, ரமேஷ் இந்திரா என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் கன்னட ரசிகர்ள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிவராஜ்குமார் தமிழில் வெளியான ஜெயிலர் படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். தற்போது வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், தமிழின் வளர்ந்து வரும் நடிகரான அபிஷன் ஜீவிந்துடன் இணைந்து பிகாசோ என்ற நேரடி தமிழ் படத்திலும் நடிக்கிறார்.
