கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது தனது தெலுங்கு டப்பிங் 'சிவ வேதா' திரைப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவராஜ்குமார், அவரது மனைவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மறைந்த பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் சிறப்பு வீடியோ திரையிடப்பட்டது. இதை பார்த்த அண்ணன் சிவராஜ்குமாரால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். 


 



வைரலாகும் வீடியோ :


ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் புனித் ராஜ்குமாரின் வீடியோவைப் பார்த்து சிவராஜ்குமார் உடைந்து அழுத வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. சிவராஜ்குமார் அருகே அமர்ந்திருந்த நந்தமுரி பாலகிருஷ்ணா அவருக்கு ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 


 






 


புனீத்குமாருக்கு குரல் கொடுத்த சிவராஜ்குமார் :


கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் சுமார் 29 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த வகையில் அவர் இறுதியாக நடித்த திரைப்படம் 'ஜேம்ஸ்'. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகள் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் புனீத் குமார் இறந்ததால் டப்பிங் பணிகள் பாதியிலேயே நின்றன. அவருக்கு பதிலாக யாரை டப்பிங் பேச வைப்பது என்ற கேள்வி எழுந்த போது அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிவராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.  


சிவ வேதா தெலுங்கு வர்ஷன் :


சிவ வேதா கிராமப்புற பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பீரியட்-ஆக்ஷன் திரைப்படம். ஹர்ஷா இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் பஜரங்கி, வஜ்ரகயா, மற்றும் பஜரங்கி 2 ஆகிய மூன்று படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக 'சிவ வேதா' திரைப்படம் மூலம் நடிகர் சிவராஜ்குமாருடன் இணைகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கணவி லக்ஷ்மன் நடித்துள்ளார். டிசம்பர் 2022ல் கன்னடத்தில் வெளியான 'வேதா' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 'சிவவேதா' என்ற தலைப்பில் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. 


 







மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் சிவராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.