கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் சிவராஜ் குமார் (Shiva Rajkumar) தற்போது இயக்குநர் ஹேமந்த் ராவ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். அப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவராஜ் குமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வைஷாக் ஜெ. கௌடா தயாரிப்பில் இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் சிவராஜ் குமார் நடித்து வரும் திரைப்படம் 'பைரவனா கோனே பாடா'. இப்படத்தின் தலைப்பு முழுக்க முழுக்க கன்னடத்தியிலேயே இடம்பெற்று இருப்பது கவனம் பெற்றுள்ளது. அந்த வகையில் படத்தின் படு மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இது வரையில் சிவராஜ் குமார் நடித்த படங்களைக் காட்டிலும் மிக பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
வெளியாகியுள்ள 'பைரவனா கோனே பாடா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நரைத்த நீண்ட தாடி முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் காட்சியளிக்கிறார் சிவராஜ் குமார். மேலும் அவரின் தோற்றமே இது ஒரு பீரியட் பிலிம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இப்படத்தின் மூலம் சிவராஜ் குமாருக்கு வேறு ஒரு இமேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவராஜ் குமார் இப்படம் குறித்து பேசுகையில் "என்னுடைய அப்பா இது போன்ற படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர். இப்படத்தின் கதையும் மிகவும் பிடித்துப் போனது. இந்த படக்குழுவினருடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். மேலும், "இது என்னுடைய லட்சிய படம். நான் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டாரை வைத்து தற்போது படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளேன். அவருடன் இணைந்து பணிபுரிவது மிகவும் உற்சாகமாக உள்ளது. அவரின் அபாரமான ஒத்துழைப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு நவீன போர் பற்றிய படமாகும்" எனக் கூறியுள்ளார் படத்தின் இயக்குநர் ஹேமந்த் ராவ்.
மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளங்கள், அரங்கங்கள் என அனைத்துமே அந்தக் காலகட்டத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.