தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த இயக்குநர்களில் ஒருவரான பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் சாந்தனு பாக்யராஜ். குழந்தை நட்சத்திரமாக 1998ம் ஆண்டு வெளியான "வேட்டியை மடிச்சு கட்டு" படத்தில் பாக்யராஜ் மகனாகவே சோனு என்ற கதாபாத்திரத்தில் சுட்டி பையனாக அடியெடுத்து வைத்தார். இன்று வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் சாந்தனு தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 



நடித்த படங்கள் :


சுட்டி பையனாக நடித்த சாந்தனு ஒரு ஹீரோவாக என்று கொடுத்தது 2008ம் ஆண்டு வெளியான 'சக்கரக்கட்டி' திரைப்படத்தில். முதல் படமே அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து கண்டேன், அம்மாவின் கைபேசி, ஆயிரம் விளக்கு, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவ கதைகள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 


டிகர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களின் கவனம் பெற்றது. தமிழ் மட்டுமின்றி “ஏஞ்சல் ஜான்” என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு கசட தபர, முருங்கைக்காய் சிப்ஸ், ஸ்டோரி ஆஃப் திங்ஸ், ராவண கூட்டம் உள்ளிட்ட பாடலை படங்களிலும் நடித்துள்ளார்.  


மல்டி டேலண்டெட் :


ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு உதவி இயக்குநராகவும் தந்தையுடன் இணைந்து பாரிஜாதம் திரைப்படத்திற்காக பணியாற்றியுள்ளார். மேலும் சாந்தனு பாக்யராஜ் ஒரு சிறந்த டான்சர். டான்ஸ் சம்பந்தமான பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். பலரும் அறியாத ஒரு விஷயம் அவர் ஒரு பாடகரும் கூட. அவர் நடித்த "கதை திரைக்கதை வசனம்" திரைப்படத்தில் எஸ். தமன் இசையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, நகுலுடன் இணைந்து "லிவ் தி மொமெண்ட்" என பாடலை பாடியுள்ளார். 'எங்க போற டி' என்ற இசை ஆல்பத்திலும் பாடியுள்ளார். 



திருமண வாழ்க்கை :


சாந்தனு தனது சிறு வயது தோழி மற்றும் பிரபலமான தொகுப்பாளினியான கீர்த்தியை 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து 'வித் லவ் சாந்த்னு கிகி' என்ற யூடியூப் சேனல் ஒன்றை  நடத்தி வருகிறார்கள். சோசியல் மீடியாவில் இந்த ஜோடிகள் போடும் போஸ்ட்கள் லைக்ஸ்களை வாரி குவிக்கும்.  சாந்தனுவின் பிறந்தநாளுக்கு அவரின் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் சோசியல் மீடியா மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  


திறமையான நடிகர் என்றாலும் அவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் அவரால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. அவரின் இந்த பிறந்தநாள் வாழ்க்கையில் பல திருப்பங்களை கொடுத்து ஜொலிக்க வாழ்த்துக்கள்.