கேம் சேஞ்சர்
ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் சொதப்பிய நிலையில் தற்போது தனது அடுத்த படத்தில் கம்பேக் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார் ஷங்கர். முன்னணி தெலுங்கு நடிகரான ராம் சரண் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள படம் கேம் சேஞ்சர். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். கார்த்தி சுப்பராஜின் கதை ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட லைகா ப்ரோடக்ஷன்ஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லைகா ஷங்கர் இடையில் மோதல் ?
இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா ப்ரோடக்ஷன்ஸ் அப்படத்தின் தோல்வி மூலம் நஷ்டத்தை சந்தித்தது. முன்னதாக லைகா தயாரித்த லால் சலாம் , வேட்டையன் ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இதனால் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் விடாமுயற்சி மற்றும் இந்தியன் 3 ஆம் பாகத்தில் வெற்றியை நம்பியிருக்கிறது லைகா. இதில்தான் இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
இந்தியன்3 படத்தில் மீதமுள்ள பணிகளை முடிக்க ஷங்கர் 60 முதல் 70 கோடி வரை லைகாவிடம் கேட்டுள்ளார். இதில் ஷங்கரின் சம்பளம் 30 கோடியும் அடக்கம். இந்தியன் 2 படம் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்த காரணத்தினால் ஷங்கர் தனது சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் படத்தை முடிக்க தேவையான பணத்தை மட்டும் தாங்கள் கொடுப்பதாக லைகா தெரிவித்துள்ளது. இதனால் உடன்படிக்கைக்கு வர ஷங்கர் மறுத்துள்ளார். மேலும் இந்திய 3 படம் எவ்வளவு நிறைவடைந்திருக்கிறது என ஷங்கரிடம் போட்டு காட்ட லைகா கேட்டுள்ளது. ஆனால் படத்தை முடிக்கும் வரை தான் படத்தை போட்டுக்காட்ட முடியாது என ஷங்கர் மறுத்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான லைகா ப்ரோடக்ஷன்ஸ் கேம் சேஞ்சர் படத்தை தமிழ் நாட்டில் வெளியிடுவதற்கு ரெட் கார்ட் விதிக்கும் படி திரைப்பட கவுன்சிலை நாடியுள்ளதாக பிஸ்மி தெரிவித்துள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் ஷங்கர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்