23 ஆண்டுகளுக்குப் பின் சர்ச்சையில் பாய்ஸ் திரைப்படம்..இயக்குநர் ஷங்கர் பாவம்!
23 ஆண்டுகளுக்குப் பின் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அண்மையில் கேரளாவில் பெண் ஒருவர் பேருந்தில் தனக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டலை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகவே சம்பந்தப்பட்ட அந்த ஆண் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். இதனால் வீடியோ வெளியிட்ட அந்த பெண் மீது எக்கச்சக்கமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இன்ஸ்டாகிராமில் வியூஸ் பெறுவதற்காக அப்பாவி நபரை அந்த பெண் மாட்டிவிட்டதாக பலர் குற்றம்ச்சாட்டினார்கள். இந்த சூழலில் தான் இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாய்ஸ். சித்தார்த் , பரத் , தமன் , ஜெனிலியா , நகுல் ஆகிய பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அன்றைய இளம் தலைமுறையினருக்கான படமாக உருவானது பாய்ஸ் திரைப்படம் இன்று பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது. இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநர் ஷங்கர் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்
சர்ச்சையில் ஷங்கரின் பாய்ஸ்
பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற எனக்கொரு கெர்ள்ஃப்ரண்ட் வேணும் பாடலே தற்போது ஹாட் டாபிக். பெண்களை பேருந்தில் இடிப்பது, கூட்ட நெரிசலான இடங்களில் இடிப்பது , தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது என இளமையின் வேகத்தில் அனைத்து பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபடுகிறார்கள். பாலியல் வக்கிரம் நிறைந்த காட்சிகள் இவ்வளவு வெளிப்படையாக ஷங்கர் எப்படி எடுத்தார் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பொது இடங்களில் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுவது மட்டுமில்லாமல் அப்படி செய்பவர்களை நல்லவர்களாக காட்டுவது என்பது மோசமான முன்னுதாரணம் இந்த மாதிரியான படங்களே நிஜத்தில் பல பாலியல் அத்துமீறலை ஊக்குவிக்கின்றன என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் சில ஷங்கருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்கள். அந்த வயதில் பாலியல் சபலத்தில் இளைஞர்கள் எப்படி நடந்துகொள்வார்களோ அதை தான் அந்த படம் பிரதிபலிக்கிறது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. மேலும் 23 ஆண்டுகளுக்கு முன் வெளியான படத்திற்காக இன்று விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஷங்கர் ரொம்ப பாவம் என்பது சிலரின் கருத்தாக உள்ளது.























