கடந்த அக்டோபர் 25 அன்று, மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இந்த வண்ண விளக்குகளும், அலங்காரங்களும் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை பெற்று வெளிவரும் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கானை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 


மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் இல்லம் `மன்னத்’ என்று அழைக்கப்படுகிறது. ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் சுமார் 20 நாள்களுக்கு முன், போதை மருந்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஆர்யன் கானுக்கு இந்த வழக்கில் ஷாரூக் கான் தரப்பில் இருந்து ஜாமீன் பெறுவதற்காகக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து ஜாமீன் அளிக்க மறுத்து வந்த நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 


இந்நிலையில் நடிகர் ஷாரூக் கானின் `மன்னத்’ இல்லத்தின் மேல் மாடியில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. வீட்டின் பிற பகுதிகள் கண்ணுக்குத் தெரியாதவாறு பெரிய திரைச் சீலைகளால் மறைக்கப்பட்டிருந்தது. இன்று காலை எலக்ட்ரீசியன்கள் சிலர் `மன்னத்’இல்லத்தின் மேல் மாடியில் வண்ண விளக்குகள் பொருத்திக் கொண்டிருந்தனர். இந்த வண்ண விளக்குகள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.



`மன்னத்’ இல்லம்


 


போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் சிறையில் இருந்து சனிக்கிழமை அன்று விடுதலை செய்யப்படுவார் என மும்பை ஆர்தர் சாலை சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். `ஆர்யன் கான் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட மாட்டார். நாளை காலை அவருக்கு விடுதலை அளிக்கப்படும்’ என சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்தர் சாலைச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் நிதின் வய்ச்சல் இதுகுறித்து கூறிய போது, `விடுதலை செய்யப்படுவது குறித்த அறிக்கை சிறையின் வாசலில் உள்ள ஜாமீன் பெட்டியில் போடப்பட வேண்டும். சிறை அதிகாரிகள் இன்று மாலை 5.35 மணி வரை அதற்காக காத்துக் கொண்டிருந்தனர்’ என்று கூறியுள்ளார். 



மகன் ஆர்யன் கானுடன் ஷாரூக் கான்


 


மும்பை உயர் நீதிமன்றம் ஆர்யன் கான் வழக்கில் வெளியிட்டுள்ள ஜாமீன் உத்தரவில் ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் போதை மருந்து தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், தனது பாஸ்போர்டைச் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சிறையில் அடைக்கப்பட்ட அர்பாஸ் மெர்சண்ட், முன்முன் தாமேச்சா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆர்யன் கானின் கைது குறித்து பல்வேறு பாலிவுட் கலைஞர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதுவரை நடிகர் ஷாரூக் கானோ, அவரது மனைவி கௌரி கானோ எந்தக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.