டங்கி


ஷாருக் கான் நடித்து நேற்று  டிசம்பர் 21 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியான திரைப்படம் டங்கி. ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்கி டாப்ஸி பன்னு, விக்கி கெளஷல் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான டங்கி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படியான நிலையில் டங்கி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது சாக்னிக் இணையதளம்.


டங்கி படத்தின் கதை


தங்களது குடும்பத்தில் இருக்கும் வறுமையை சமாளிக்க எப்படியாவது லண்டனுக்கு செல்ல வேண்டும் என்று துடிக்கும் நான்கு நபர்கள். அவர்கள் லண்டனுக்கு கொண்டு செல்ல உதவுகிறார் ஷாருக் கான். சொந்த ஊரைவிட்டு புலம்பெயர்ந்து அந்நிய நாட்டில் சென்று இந்த நான்கு பேர் படும் கஷ்டங்களை மையமாக வைத்து நகைச்சுவை மிகுந்த ஒரு அரசியல் படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் ஹிராணி.


முதல் பாதியில் நகைச்சுவை மட்டுமே அதிகம் இருப்பதாகவும் இரண்டாம் பாதியில் படல் சலிப்படைந்து விடுவதாகவும் பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வெளியாவதற்கு முன்பாகவே முன்பதிவில் வசூலை குவித்த டங்கி திரைப்படம் இன்றுடன் சலார் திரைப்படத்துடன் மோத இருக்கிறது. படத்திற்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் சலார் என இரு முனைகளில் இருந்து சவால்களை சந்திக்க இருக்கிறது டங்கி. இது இந்தப் படத்தின் வசூலில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்து என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள் 


 முதல் நாள் வசூல்


டங்கி திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் தோராயமாக 30 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் இணையதளம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வெளியாகி அதிக வசூல் ஈட்டிய படங்களில் 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது இப்படம். ஷாருக் கான் நடித்து இதற்கு முன்பாக வெளியான ஜவான் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 70 கோடியை வசூலித்து சாதனைப் படைத்த நிலையில் டங்கி படத்தின் வசூல் ஜவானுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. டங்கி படத்தின் அதிகாரப் பூர்வ வசூலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.


சலார்


பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஷ்ருதி ஹாசன் , ப்ரித்விராஜன் சுகுமாரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சலார் தமிழ் , தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. சலார் திரைப்படம் ஷாருக் கானின் டங்கி படத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. இந்த மோதலில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும்