சேலம் மாநகர் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத், திரைப்பட உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரசாத்தின் முதல் மகளான பிரஹிமா,11 வயது ஆகும் இவர் பொன்னம்மாபேட்டை அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தையுடன் இணைந்து திரைப்படம் எடுக்கும் இடத்திற்கு சென்ற பிரஹிமாவும் திரைப்படம் இயக்க ஆசை வந்துள்ளது. இதனை தந்தையிடம் கூறிய போது அவர் சினிமா குறித்தும், படத்தை இயக்குவது குறித்தும் கற்றுக் கொடுத்துள்ளார். 



இந்த நிலையில் தனது பத்தாம் வயதில் 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பள்ளியில் நடந்த உண்மை நிகழ்வை படமாக்க வேண்டும் என தந்தையிடம் பிரஹிமா கூறியுள்ளார். மகளின் கதையைக் கேட்ட பிரசாத் கதைக்களம் நன்றாக இருப்பதால் தானே முன்வந்து படத்தை தயாரிப்பதாக மகளிடம் வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி, பிரஹிமா "கமலியின் எதிர்காலம்" என்ற தலைப்பில் முழு நீள படத்தை இயக்கி அதில் நடித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதையும், அவரை மீண்டும் பள்ளியில் படிக்க வைப்பதற்காக சக நண்பர்கள் முயற்சி செய்வதையும் கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரஹிமா கூறியுள்ளார். இந்த தருணத்தில் நான் படம் எடுக்க உதவிய என் தந்தை, தாய், சகோதரி உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.


மேலும், எனது படத்தை புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி பார்த்து வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் திரைப்படத்தை காட்சிப்படுத்த வேண்டும் எனவும், எனது படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என பிரஹிமா கோரிக்கை வைத்துள்ளார்.



இதுகுறித்து பிரஹிமாவின் தந்தை பிரசாத் கூறுகையில்," எனது மகளை சிறிய வயதில் அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சிறிய வயதில் எனது மகளை இயக்குனர் ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் இது உலக சாதனை என்பது எனக்குத் தெரியாது. நான் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றும்போது, குறும்படங்கள் இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று பயிற்சி கொடுப்பேன். பின்னர் படத்திற்கான கதையை தயார் செய்து என்னிடம் கூறினாள்.


அதனை வைத்து தயாரிக்கப்பட்டது தான் "கமலியின் எதிர்காலம்". இந்தப் படத்திற்காக பலரும் உங்களுக்கு உதவும் உள்ளனர், அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை வெளியிடுவதற்கு எங்களுக்கு பல சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக பள்ளி மாணவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும், அதற்காகத்தான் இந்த படம் எடுக்கப்பட்டது.


மேலும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவி திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். எனவே, இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திரைப்படத்தைப் பார்த்து தன் மகளுக்கு அங்கீகாரம் வழங்கி, விரைவில் இந்தத் திரைப்படம் வெளியிட்டு பள்ளி குழந்தைகள் இதனை பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முழுமையான நோக்கம். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்" என கோரிக்கை வைப்பதாகவும் கூறினார்.