சினிமா நடிகர்களின் வாரிசுகள் எனத் தெரியாமலேயே திரையுலகில் தலைகாட்டியவர்களில் முக்கியமானவர் நடிகர் சுமதி ஸ்ரீ. தனது தந்தை குறித்தும் மற்றும் தான் திரைத்துறைக்கு வந்த அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.


“எனது அப்பா, பெரியப்பா, அம்மா என எல்லோருமே சினிமா அனுபவம் மிக்கவர்கள். பெரியப்பா எம்.ஜி.ஆர். படங்களில் கணக்குப் பிள்ளை வேடங்களில் நடித்தவர். அவர்தான் அப்பாவை தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்து நடிக்க வாய்ப்பு தேடச் சொன்னார். அவருடன் ஆறு மாதங்கள் தங்கி அப்பா நடிக்க வாய்ப்பு தேடினார்.எம்.ஜிஆர். நடித்த பல்லாண்டு வாழ்க படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. படத்தில் சிறையில் சின்னச் சின்ன வில்லன்கள் எல்லாம் இருப்பார்கள்.அவர்களுக்கு லீடர் வில்லனாக எனது அப்பா நடித்திருப்பார். படம் சூப்பர்ஹிட்.நூறாவது நாள் விழாவில் எல்லோருக்கும் கேடயம் வழங்க மேடைக்கு அழைத்தார்கள். அப்பாவின் பெயரை தங்கராஜ் என அழைக்கவும் எம்.ஜி.ஆர் இடைமறித்து சினிமாவில் நிறைய தங்கராஜ் இருக்கிறார்கள்.அதனால் குழப்பம் ஏற்படும். படத்தில் நீங்கள் எம்.எல்.ஏ.வாகத்தானே நடித்தீர்கள்.


அதனால் உங்கள் பெயர் எம்.எல்.ஏ. தங்கராஜ் என்றே இருக்கட்டும் என்றார். கேடயத்தில் எம்.எல்.ஏ. தங்கராஜ் எனப் பெயரிட்டுக் கொடுத்தார்கள்.அப்பா அதன் பிறகு துறையில் அப்படித்தான் அழைக்கப்பட்டார். நிறைய ஹீரோக்களுக்கு வில்லனாக பிறகு நடித்தார். அம்மாவும் சினிமாவில் நிறைய சின்னச் சின்னக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருவார்.பாலய்யாவுக்கும், சிவாஜி கணேசனுக்கும் பத்மினி வீட்டுக்கு வழிகாட்டும் கதாப்பாத்திரம். அப்பா, அம்மாவிடமிருந்து எனக்கும் சினிமா ஆர்வம் ஒட்டிக் கொண்டது. சிவாஜி படத்தைப்


பார்த்துவிட்டு வந்து கண்ணாடியில் அதுபோலவே நடித்துப் பார்ப்பேனாம். அம்மா சொல்லுவாங்க.அதனால் நானும் சினிமாவில்தான் நடிப்பேன் என அப்போதே அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. சின்னச் சின்னக் கதாப்பாத்திரங்களில் நடித்தேன்.என் கணவரும் சினிமாத்துறைதான். காதல்திருமணம். ஆனால் திருமணத்துக்காக நடிப்பை தியாகம் செய்ய வேண்டியதாகப் போச்சு. ஏன் நடிப்பை விடறேனு அம்மா அப்பா கேட்டாங்க.நான் பொருளாதாரரீதியாகச் சுதந்திரமாக இருக்கனும் என்பது அவர்களுடைய ஆசை.


நான் அதெல்லாம் பார்த்துக்கலாம்னு நடிப்பை விட்டேன்.ஆனால் அவர்கள் சொன்ன மாதிரியே நான் அந்தச் சூழலுக்குத் தள்ளப்பட்டேன்.என்னுடைய கணவருக்கு சினிமா வாய்ப்பு போச்சு. வீட்டில் வறுமை. நடிப்பைத் தவிர வேற எதுவும் தெரியாது மற்றவர்கள் வீட்டில் பாத்திரம்தான் கழுவப் போகனும் என்கிற சூழல். அப்போதுதான் சீரியல் வாய்ப்புகள் வரத் தொடங்கியது. சீரியல் எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ். எனக்கு நடிப்பு திறமை என அத்தனை இருந்தும் சினிமாவில் ஏன் என்னால் என் சக நடிகர்களைப் போல முன்னுக்கு வரமுடியவில்லை என்கிற ஏக்கம் இன்றளவும் இருக்கு” என கண்ணீர் மல்கப் பகிர்கிறார் அவர்.