தன்னை தாக்கியதாக சீரியல் நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் சீரியல் நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா. தற்போது திவ்யா கன்னடம் சீரியல்களிலும் மற்றும் தமிழ் சீரியலான செவ்வந்தி தொடரில் நடித்து வரும் இவருக்கும் சின்னத்திரை நடிகர் அர்னவிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அர்னவ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "செல்லம்மா" தொடரில் சித்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருவரும் "கேளடி கண்மணி" தொடரில் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்திருந்தது.இரண்டு வருடமாக லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில் அதன்பின் திருமணம் நடந்தது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாகவும், இதனால் கருக்கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் திவ்யா வீடியோ வெளியிட்டு அதிர வைத்தார். இதனை மறுத்த அர்னவ் திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். மேலும் அர்னவ் சீரியல் நடிகையோடு பழகி வருவதாகவும் கூறி ஆடியோ ஒன்றை திவ்யா வெளியிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி புகார் தெரிவித்தும், ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
இதற்கிடையில் கர்ப்பிணி பெண்ணான தன்னை தாக்கியதற்காக திவ்யா போரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேரில் ஆஜராக சொல்லியும் அர்னவ் வரவில்லை.
இதனால் அக்டோபர் 14 ஆம் தேதி அவரை காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாமல் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18 ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வழக்கறிஞர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் அவர் தலைமறைவானதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட அர்னவ்வை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.