புதுப்பேட்டை - அயோக்கியர்களின் உலகம்
அதுவரை ஒரு முழு கேங்க்ஸ்டர் உலகத்தை ஒரு தமிழ் சினிமாவில் யாரும் அதிகம் பார்த்ததில்லை. மணிரத்னம் இயக்கிய நாயகன் ஒரு நல்ல காரணத்திற்காக ஒருவன் கேங்ஸ்டர் ஆவதை காட்டியது. பொதுவாக இந்த மாதிரியான கேங்ஸ்டர் படங்களில் ஒரு கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் நாயகன் முரட்டு உடம்புடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் ஒருவனைத்தான் நாம் பார்த்து பழகியிருப்போம்.
தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு ஒல்லியான தேகம் கொண்ட ஒரு பையன் ஒரு மிகப்பெரிய கேங்க்ஸ்டர் ஆகிறான் என்று சொன்னால் அன்றைய சூழலில் யாரும் நிச்சயம் நம்பியிருக்க மாட்டார்கள்தான்.
இந்தக் கதையை சாத்தியப்படுத்துவதற்கு செல்வராகவன் என்கிற இயக்குநர் தேவைப்பட்டார். அவருடன் தனுஷ் என்கிற ஒரு நடிகர் தேவைப்பட்டார். கடந்த 2006-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி புதுப்பேட்டை படம் வெளியானது. படம் வெளியாகி கிட்டதட்ட 18 ஆண்டுகள் கழித்தும் இது மாதிரியான ஒரு கதையை இன்று வரை தமிழ் சினிமாவால் மீண்டும் யாராலும் உருவாக்க முடியாததே அதன் வெற்றி.
18 ஆண்டுகளை நிறைவு செய்யும் புதுப்பேட்டை
அப்படி என்ன புதுப்பேட்டை படத்தில் பாராட்டுவதற்கு இருக்கிறது என்று 2024-ஆம் ஆண்டில் நமக்கு தோன்றுவதில் தவறில்லை. இன்று கேங்ஸ்டர் படத்தில் கிட்டத்தட்ட நாம் புதிதாக பார்ப்பதற்கு எதுவும் இல்லாத அளவுக்கு அத்தனை படங்களை, அத்தனை மொழிகளிலும் பார்த்துவிட்டோம்.
ஆனால் புதுப்பேட்டைப் படத்தை அது வெளியான நேரத்தில் திரையரங்குகளில் பார்த்த ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியும் அதுவரை எந்தத் தமிழ் ரசிகர்களும் பார்த்திராதது.
ஒரு காட்சியைப் பார்த்த ரசிகர்கள் அது கொடுத்த அதிர்ச்சியிலிருந்து வெளிவருவதற்கு முன்பே அடுத்தக் காட்சி அவர்களை மிரள வைத்திருக்கிறது.
படத்தின் தொடக்கத்தில் பையை மாட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் அதே சிறுவன்தான் நம் கண் முன் தேவதையா சாத்தானா என்கிற பதற்றத்தை உண்டாக்கும் கண்களால் நம்மை பார்க்கிறான். சமூக நலனிற்காவோ சமூகத்தை திருத்துவதற்காகவோ கொக்கி குமார் உருவாவதில்லை. அவனது வாழ்க்கை அவனை ஒரு திசையில் அழைத்துச் செல்கிறது. அதில் சிறந்தவனாக இருப்பதே அவன் உயிரைக் காப்பாற்றும். சமூகத்தில் நாம் அயோக்கியர்கள் என்று கருதுபவர்களின் கதையைத்தான் இப்படம் நமக்கு சொன்னது.
ஆனால் அதில் நம்மால் நட்பை புரிந்துகொள்ள முடிந்தது, துரோகத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது, வஞ்சத்தை, கருணையை புரிந்துகொள்ள முடிந்தது.
புதுப்பேட்டை படம் வெளியான சமயத்தில் அவ்வளவு பெரிய வெற்றியெல்லாம் அடையவில்லை. காரணம் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை என்று இல்லை. இந்தப் படம் தனக்கு பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்கிற குழப்பமே அவர்களிடம் இருந்தது. அதுவரை தமிழ் சினிமாவில் வந்த படங்கள் மக்கள் மனதில் உருவாக்கியிருந்த ஒட்டுமொத்த ரசனையையும் இந்தப் படம் கலைத்துப் போட்டது என்றே சொல்லலாம்.
இந்தப் படத்தின் கதாநாயகன் முந்தைய கதாநாயகர்களைப்போல் ஒழுக்கசீலன் இல்லை. தன் நண்பனின் தங்கை திருமணத்திற்கு தாலி எடுத்துக்கொடுக்க சென்று அவளுக்கு தாலி கட்டுபவன். இந்தப் படத்தின் கதாநாயகிகள் யாரும் கற்புக்கரசிகள் இல்லை ஒழுக்கம், வரம்பு, என்று சமூகம் வரையறுக்கும், நம்பும் எதையும் நீங்கள் இங்கே காணமுடியாது.
அந்த உலகத்தில் அவரவருக்கு அவரவர் நியாயங்கள். ஆனால் அதில் ஒரு வாழ்க்கைத் துடிப்பை அவர்களால் பார்க்க முடிந்தது. இப்படியான நிலையில் இந்தப் படத்தில் நாம் யார் பக்கம் என தெரிந்துகொள்வதற்கே கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தேவைப்பட்டன.
2016-ஆம் ஆண்டு அதன் பத்தாவது ஆண்டை முன்னிட்டு புதுப்பேட்டை படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த முறை ரசிகர்ளுக்கு தங்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்திருந்தது. இது சாத்தியமாக ஒரு செல்வராகவனும், ஒரு தனுஷும் தேவைப்பட்டார்கள்!