ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடந்த சம்பவம் குறித்து இயக்குநர் செல்வராகவன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “ஆயிரத்தில் ஒருவன்”. சோழர் பாண்டியர் போரிட்டு பாண்டியரின் குலதெய்வச் சிலையையும், ஒரு சோழ இளவரசனையும் வியட்னாம் அருகிலுள்ள ஒரு தீவுக்கு அனுப்பி வைக்க, அவரை தேடிப் போன தொல்பொருள் ஆய்வாளர் காணாமல் போகிறார். அவரை தேடி செல்லும் பாண்டியர் குலத்தைச் சேர்ந்த ரீமாசென், அழகம் பெருமாள் தலைமையிலான குழுவில் கார்த்தி, ஆண்ட்ரியா ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
3 பேரும் சோழர்களிடம் சிக்க, தன் வித்தையால் தான் சோழ அரசரிடம் இருந்து வந்த தூது நங்கை நான் என இளவசரிடம் ரீமாசென் நாடகமாடுகிறார். ஆனால் உண்மையான தூதுவன் கார்த்தி தான். சிலையை மீட்க வந்த ரீமாசென் அதனை மீட்டாரா, சோழர்களின் கதி என்ன ஆனது என்பதை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டிருக்கும். இதில் சோழ இளவசரனாக பார்த்திபன் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வெளியான காலக்கட்டத்தில் இப்படம் ரசிகர்களுக்கு புரிவதில் சிக்கல் இருந்தது. ஆனால் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஆயிரத்தில் ஒருவனை தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே இப்படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் பார்த்திபன் நடித்திருந்த கேரக்டரில் தனுஷ் நடிப்பார் என சமீபத்தில் பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
மேலும் சில தினங்களுக்கு முன் வெளியான சோழர்ளை மையப்படுத்திய பொன்னியின் செல்வன் படத்தை மக்கள் கொண்டாடுவதைப் போல ஆயிரத்தில் ஒருவனை கொண்டாடியிருந்தால் அது 2,3,4-ம் பாகங்கள் என சென்றிருக்கும் என செல்வராகவன் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். இதுதொடர்பான நேர்காணல் ஒன்றில், அவரிடம் அதிக பொருட்செலவில் படம் உருவாவது குறித்து பல இடங்களில் உங்கள் ஆதங்கத்தை தெரிவித்தீர்கள். இப்ப பார்த்தா ஆயிரத்தில் ஒருவன் ஒரு பெரிய பட்ஜெட் படம். நீங்க எந்த அளவு தயாரிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பீர்கள் என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு ஆயிரத்தில் ஒருவன் பெரிய பட்ஜெட் படம் தான். ஆனால் தயாரிப்பு தரப்பு 60% பணம் மட்டும் தான் செலவிட்டது. அதோடு முடிந்து விட்டது. நானும் எதுவும் கேட்கவில்லை. மீதி 40% பணம் நான் வட்டிக்கு வாங்கி, கைக்காசு போட்டு எடுததது. அதனை கட்டவே எனக்கு 10 வருஷம் மேலே ஆச்சு. தயாரிப்பாளர் போட்ட பணத்தை படம் ரிலீஸ் பண்ணும்போதே அவர் எடுத்துட்டாரு. ஆனால் என்னோட பணம், எனக்கு சரியான பின்புலம் இல்லாததால கொஞ்சம் கொஞ்சமா நான் அதை கட்டி மீண்டேன்.
இந்த விஷயம் தயாரிப்பாளர் சங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். நான் தயாரிப்பாளர் கிட்ட ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் சொன்னேன். அதை தாண்டி படம் வந்துட்டு. அவர்கிட்ட கேக்குறது நியாயம் இல்ல. அதனால் நான் என்னோட பணத்தை போட்டேன். இது யாருக்குமே தெரியாது. மேலும் படங்கள் பண்ண பண்ண இயக்குநர்களுக்கு தெரியும். எது தேவையான செலவு, தேவையில்லாத செலவு என புரியும். ஒருவிஷயம் ஆயிரத்தில் ஒருவன் மிகப்பெரிய பட்ஜெட் இல்ல. மொத்தமே ரூ.30 கோடி தான். தயாரிப்பாளர் 18 கோடி, நான் 12 கோடி போட்டு எடுத்தேன் என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.