நடிகை மனிஷா யாதவ்வுக்கு இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. 


கூடல் நகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் சீனு ராமசாமி, தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு  “இடம் பொருள் ஏவல்” என்ற படத்தை இயக்கினார்.  இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலரும் நடித்திருந்தனர். இப்படம் நிதி பிரச்சினை காரணமாக இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. 


இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் ’வலைப்பேச்சு’ பிஸ்மி, ‘இடம் பொருள் ஏவல் படத்தில் நந்திதா ஸ்வேதா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் மனிஷா யாதவ். இவர் ஒரு வாரம் கொடைக்கானலில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து மனிஷா தனக்கு போன் மூலம் தெரிவித்தது உள்ளிட்ட ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூற திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். 


உடனடியாக இதற்கு விளக்கம் கொடுத்த சீனு ராமசாமி, ‘ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் மனிஷா எனக்கு நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க’ என தெரிவித்தார். இப்படியான நிலையில் மனிஷா யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவின் மேடையில் சீனு ராமசாமி இருந்ததால் நன்றி தெரிவித்தேன். ஒருமுறை என்னிடம் மிகவும் அவமரியாதையாக நடந்த ஒருவருடன் நான் ஏன் வேலை செய்ய வேண்டும்? சீனு ராமசாமி சார் உண்மையை பேசுங்கள்” என தெரிவித்தார். இதன்மூலம் பிஸ்மியின் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளும் வகையில் மனிஷா பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இப்படியான நிலையில், ”சில கேள்விகள் flash back” என்ற தலைப்பில் சீனு ராமசாமி மீண்டும் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,



  • இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா

  • படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?

  • விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார்?

  • என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?

  • மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தாயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.

  • அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன். 


அண்ணன் பிஸ்மி ஒவ்வொரு நாள் தன் பேச்சை எனக்கு அனுப்புவார். ஒரு பூ வாட்ஸ்சப்பில் அவருக்கு போடுவேன் கடைசியில் மலர் அஞ்சலி எனக்கு வைக்க முயல்வார் என நான் எதிர் பார்க்கவில்லை. மாமனிதன் பெற்ற விருதுகளை பிண அலங்காரம் என வசை பாடியது எனக்கு வலித்தது, மாமனிதன் உலகம் போற்றிய ஒரு சினிமா, அதனால் உங்களை ஒருமையில் எழுதி விட்டேன். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலமாக பேசி பின் நானே அண்ணே என்னை நெகட்டிவா சொல்ல வேண்டாம் என கெஞ்சிய வாய்ஸ் நோட்ஸ் அனுப்பினேன் மூன்று மாதம் முன்பு. ஆண்களை படத்தில் நீக்கினால் சிறந்த டைரக்டர் அதுவே பெண்களை நீக்கினால் பாலியல் பழியா? என்ற கேள்விகளோடு சீனு ராமசாமி அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.