சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவுதமி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கண்ட 'தர்மதுரை' படத்தின் பெயரிலேயே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியை இயக்கிய ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் 'தர்மதுரை'. இப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
யதார்த்தமான கதை :
தமன்னா, ராதிகா, சிருஷ்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் என்று சொல்வதை காட்டிலும் வாழ்ந்து இருந்தனர் என்றே சொல்ல வேண்டும். விஜய் சேதுபதி வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான விஷயங்களால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் எப்படி மறுவாழ்வு பெறுகிறார் எனும் சாதாரண திரைக்கதையை மிகவும் யதார்த்தமான முறையில் காட்சிப்படுத்திய இப்படம் பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது.
கதை சுருக்கம் :
கிராமத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த விஜய் சேதுபதி படித்த முதல் தலைமுறையாக டாக்டராகிறார். கல்லூரியில் படிக்கும் போதே தமன்னா, ஸ்ருஷ்டி என இருவரும் அவர் மேல் ஆசைப்பட தமன்னா உள்ளுக்குளேயே காதலை ஒளித்து கொள்ள, ஸ்ருஷ்டி விஜய் சேதுபதியிடம் காதலை வெளிப்படுத்துகிறார். தமன்னா மீது தனக்கு விருப்பம் இருந்தாலும் விஜய் சேதுபதி அதனை வெளிப்படுத்தாமல் உள்ளத்தில் பூட்டி வைக்கிறார். ஆனால் சிருஷ்டி எதிர்பாராதவிதமாக உயிரிழக்கிறார்.
அதன் பிறகு படிப்பை முடித்து பிறகு தனது சொந்த கிராமத்திலேயே மருத்துவ சேவை செய்யும் விஜய் சேதுபதி அங்கே ஐஸ்வர்யா ராஜேஷ் மீது காதல் கொள்கிறார்.
இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்படும் தகராறால் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்கொலை செய்து கொள்கிறார். அந்த வேதனையில் குடிக்கு அடிமையாகிறார் விஜய் சேதுபதி. மறுபக்கம் தமன்னாவும் திருமண முறிவு ஏற்பட்டு கணவனை பிரிந்து தனிமையில் வாழ்கிறார். பழைய நண்பர்கள் மீண்டும் நட்பாக பழக காதல் மீண்டும் மலர்ந்து ஒன்று சேர்கிறார்கள். இது தான் படத்தின் கதை சுருக்கம்.
சிறப்பான பங்களிப்பு :
ஆர்.கே. சுரேஷின் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, வைரமுத்துவின் வரிகள், சுகுமாரின் ஒளிப்பதிவு என தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. யதார்த்தமான விஜய் சேதுபதியை தமிழ் சினிமா கொண்டாடிய காலத்தில் வெளியான இப்படம் அவருக்கு குடும்ப ஆடியன்ஸை பெற்றுத் தந்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
சீனு ராமசாமியின் சிறப்பான படைப்புகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த 'தர்மதுரை' திரைப்படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவை எதுவும் படத்தின் வெற்றியை பாதிக்கவில்லை. 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த தர்மதுரை படத்தை ரசிகர்கள் இன்றும் கொண்டாடுவது தான் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.