‘ஜெயிலர் 2’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே நேர்மறையான விமர்சனங்கள் வரத்தொடங்கியதால் அடுத்த நான்கு நாட்களுக்கு டிக்கெட் முழுவதும் புக் ஆகியுள்ளது. படத்தை பார்த்த சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த வரிசையில், சீமானும் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பாதவது:

தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்! புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது. 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ரஜினிகாந்த், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சன், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.