தொலைக்காட்சியில் விஜய் படமே போடவில்லை என ஈரோட்டில் சிறுமி ஒருவர் அழுதுக் கொண்டே பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.
விஜய் படங்களை குறைத்த டிவி சேனல்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் மாறியுள்ளார். 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும் அல்லது திராவிட கட்சிகளின் ஆட்சி தொடருமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும். இப்படியான நிலையில் விஜய் கடுமையாக திமுகவையும் பாஜகவையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.
இது ஒருபுறம் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சிகளில் விஜய் படங்கள் ஒளிபரப்பப்படுவதில்லை. 1992 ஆம் ஆண்டு சினிமாவிற்கு நடிகராக அறிமுகமான விஜய் தற்போது 33 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அவர் 68 படங்களில் நடித்துள்ள நிலையில் அந்தப் படங்களின் சாட்டிலைட் உரிமைகள் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி மற்றும் ராஜ் டிவி ஆகிய முன்னனி சேனல்கள் நிறுவனத்திடம் உள்ளது.
இந்த நிலையில் விஜய்யின் பெரும்பாலான படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பெற்றுள்ள சன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் சமீபகாலமாக விஜய் படங்கள் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை. இதற்கு அரசியல் ரீதியாக காரணங்கள் சொல்லப்படுகிறது. எனினும் உண்மையாக காரணம் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் விஜய் படம் ஒளிபரப்பப்படாதது குறித்து விமர்சனமும் மீம்ஸ்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இப்படியான நிலையில் தான் ஈரோட்டில் டிசம்பர் 18ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தேர்தல் பரப்புரை நடக்கும் இடத்திற்கு தங்கள் குழந்தைகளுடன் வந்த வண்ணம் இருந்தனர்.
வீணாய் போன படங்கள்
அதில் யூட்யூப் சேனல் ஒன்றில் பேசிய ஒரு சிறுமி, விஜயைப் பற்றி கூறும்போது கண்கலங்கினார். அச்சிறுமி, “டிவியில் விஜய் அண்ணா படமே போட மறுக்கிறார்கள். வீணாய் போன படத்தை போடுகிறார்கள். விஜய் படத்தை போட்டால் என குறைந்த போய்விடுவார்கள். பாடல் கூட போட மாட்டுகாங்க. அவர் தேர்தலில் ஜெயித்தால் போடுவார்கள். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நாங்கள் அவரை அவரின் வீட்டிற்கு எல்லாம் சென்று வெளியில் நின்று பார்த்துள்ளோம். விஜய் அண்ணா நீங்களே ஏதாவது ஒரு படத்தை போட சொல்லுங்க” என அந்த சிறுமி கூறியதை விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.