நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கியுள்ள புதிய படத்தின் தலைப்பு ‘சீன்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 47-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா 47 டைட்டில் டீசர்
‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜீத்து மாதவன், சூர்யாவை வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவுடன் நஸ்ரியா நசீம் மற்றும் நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில், அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது.
சூர்யா 47 என்ற அடையாளத்துடன் தயாராகி வந்த இப்படத்திற்கு ‘சீன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது டைட்டில் டீசர் மூலம் படக்குழு அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தீபாவளி ரிலீஸ்
இதனிடையே, படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு சூர்யாவுக்கு இது மூன்றாவது திரைப்பட வெளியீடாக அமைய உள்ளது. ஏற்கெனவே ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளியாகியுள்ள நிலையில், ‘சீன்’ படத்தின் வருகை சூர்யா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஜீத்து மாதவனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் சூர்யாவை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் கதை மற்றும் சூர்யாவின் கதாபாத்திரம் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், வெளியான டைட்டில் டீசர் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தீபாவளி ரிலீஸாக ‘சீன்’ வெளியாகவுள்ளதால், அன்றைய தினம் வெளியாகும் மற்ற படங்களுடன் போட்டியிடும் சூழலும் உருவாகியுள்ளது. குறிப்பாக நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் தீபாவளி வெளியீட்டை நோக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த ஆண்டு தீபாவளி தமிழ் சினிமாவுக்கு முக்கியமான காலமாக அமையும் என எதிர்பார்க்கலாம்
