விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு முன்னதாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


டீசர் ரிலீசுக்கு முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் அவர்களின் கேள்விக்கு பதிலளித்து இருந்தனர். அப்போது மேடையில் பேசிய சத்யராஜ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். 


 



'மக்கள் என் பக்கம்' என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த படம்.  அதே பெயரில் 1987ஆம் ஆண்டு சுரேஷ் பாலாஜி தயாரிப்பில், கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில், சத்யராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அப்போது அந்தப் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்ற ஆலோசனை நடைபெற்ற போது "மக்கள் என் பக்கம்" என தலைப்பு வைக்கலாம் என பாலாஜி கூறியுள்ளார். “அது வாத்தியார் படம் அதை வைப்பது சரியாக வராது. அதற்கும் மேல் அந்த டைட்டில் வைக்கும் அளவுக்கு எனக்கு தகுதியும் கிடையாது. அது அவருக்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒரு டைட்டில்” என அதை மறுத்துள்ளார் சத்யராஜ். நான் சென்று அவரிடம் அனுமதி வாங்கி வருகிறேன் என பாலாஜி சென்றுள்ளார். புரட்சித் தலைவரிடம் 'மக்கள் என் பக்கம்' படத்தின் தலைப்பை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்ட போது அவர் தாராளமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். யார் ஹீரோ என கேட்டு தெரிந்து கொண்டார். அதற்கு முன்னர் அவருடன் பழக எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. 




ஆனால் 'லூட்டி' என்ற ஒரு படத்தில் நானும் புரட்சி தலைவரும் சந்தித்து பேசிக்கொள்வது போல ஒரு கிராபிக்ஸ் பயன்படுத்தி ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். ஒரிஜினல் படத்தில் இல்லாமல் வேறு வசனம் எம்.ஜி.ஆருக்கு பேச வேண்டும். மயில்சாமி தலைமையில் எத்தனையோ மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் வைத்து பேசி பார்த்தும் எதுவும் சரியாக அமையவில்லை. அப்போது மயில்சாமி தான் சத்யராஜ் அண்ணனை கூப்பிடுங்க. அவர் தான் தலைவரை போல சரியாக பேசுவார் என சொல்லி என்னை அழைத்தார்கள். என்னுடைய டப்பிங் போர்ஷனை முடித்துவிட்டு புரட்சித் தலைவருக்கும் நானே டப்பிங் பேசிவிட்டேன். அவருக்கு டப்பிங் பேசினா ஒரே ஆள் நானாக தான் இருப்பேன். அவர் குண்டடி பட்டபோது கூட அவரே தான் டப்பிங் பேசினார் தவிர வேறு யாரையும் வைத்து பேசவில்லை. எனவே புரட்சி தலைவருக்கே டப்பிங் பேசிய பெருமை எனக்கு கிடைத்தது” எனப் பகிர்ந்துள்ளார்.