2014ம் ஆண்டு வெளியான 'குக்கூ' திரைப்படம் மூலம்  தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். அதை தொடர்ந்து அவர் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்ததுடன் சிறந்த பிராந்திய மொழி திரைப்படம் என்ற பிரிவின் கீழ் தேசிய விருதையும் பெற்றது. முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ராஜு முருகன்.


அடுத்தடுத்து தோல்வி:


அதை தொடர்ந்து ஜிப்ஸி, ஜப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகனுக்கு இரு படங்களும் தோல்வி படமாக அமைந்தது. அதனால் பெரும் நஷ்டத்தில் சிக்கினார். அடுத்ததாக அவர் ஒரு கதையை தயார் செய்து நடிகர்களை அணுகிய போது எந்த நடிகரும் அவரின் படத்தில் நடிக்க முன்வரவில்லை. ஆனால் ராஜு முருகனுக்கு கை கொடுக்க உதவி கரம் நீட்டியுள்ளார் நடிகரும் இயக்குநருமான சசிகுமார்.


 




'சுப்ரமணியபுரம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார் அதை தொடர்ந்து 'நாடோடிகள்' போன்ற பல வெற்றி படங்களை இயக்கி நடித்து வந்தார். பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடிக்க துவங்கினார். இயக்குநராக ஜெயித்தவருக்கு நடிகராக பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. ஒரு சின்ன பிரேக் எடுத்து கொண்ட அவருக்கு 'அயோத்தி' படம் திருப்புமுனையாக அமைந்தது. 


தற்போது கேரக்டர் ரோலில் சிறப்பாக நடித்து வரும் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கருடன்' படம் நல்ல ஒரு வரவேற்பையும் பாராட்டையும் பெற்று கொடுத்தது. அதன் மூலம் அவரின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது.  இந்நிலையில் 'ஜப்பான்' படம் மூலம் அடிப்பதாளத்துக்கு  சென்ற இயக்குனர் ராஜு முருகனுக்கு உதவி செய்யும் நோக்கில் அவரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சசிகுமார்.


ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார்:


ராஜு முருகன் தற்போது சிறிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். அப்படத்தின் ஹீரோவாக சசிகுமார் நடிக்க ஹீரோயினாக கன்னட நடிகை சைத்ரா ஆச்சார் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். கிராமப்புற கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க  கோவில்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.  


 




நடிகை  சைத்ரா  ஆச்சார் ஏற்கனவே கன்னட படங்களில் பிஸியாக நடித்து வரும் சூழலில் தமிழ் திரையுலகில் நடிக்க வாய்ப்பு பெற்றதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன என கூறப்படுகிறது. கன்னட திரையுலகில் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் 'ரூபாந்தரா' படத்தில் இடம்பெற்ற 'கிட்டாலே...' என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகைகளின் இடத்துக்கு முன்னேறுகிறாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.