பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள "சர்தார்" படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 



 


பலரின் கனவு கதாபாத்திரத்தை கைப்பற்றிய கார்த்தி :


சில தினங்களுக்கு முன்னர் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் எனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கார்த்தியின் அடுத்த படமான "சர்தார்" படத்தின் ரிலீஸ்  தேதி தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடிகர் கார்த்தியின் திரை வாழ்வில் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான "விருமன்" திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல  வசூலையும் ஈட்டியது. அதனை தொடர்ந்து மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் உலகளவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகர் கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம் எம்.ஜி.ஆர் முதல் ரஜினிகாந்த் வரை அனைவரும் விருப்பப்பட்ட ஒரு கனவு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை மிகவும் அழகாக சிறப்பாக திரையில் பிரதிபலித்துள்ளார் நடிகர் கார்த்தி. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளன. 






சர்தார் ரிலீஸ் தேதி உறுதி :


பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வந்த திரைப்படம் "சர்தார்". கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. நடிகர் சூர்யா வெளியிட்ட டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். சர்தார் திரைப்படம் 100% தீபாவளிக்கு வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகும் என்றும் இதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளனர் படக்குழுவினர். பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.