மதுரை பாப்பரத்தியில் நேற்று நடந்த தவெக 2ஆவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என கூறியிருந்தார். அதேபோன்று அதிமுக, பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அவரது பேச்சுக்கு அதிமுக தலைவர்களும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சரத்குமாரும் விஜய்யை விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

பாஜகவை தாக்கி பேசிய விஜய்

நேற்று நடந்த தவெக மாநாட்டில் 4.50 மணிக்கு தனது உரையை தொடங்கிய விஜய் பிற்பகல் 5.25 மணிக்கு முடித்து, 35 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் சிங்கம் கதையில் ஆரம்பித்து அனல் பறக்கும் பேச்சால் தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது, எங்களுக்கு தேவையானதை செய்யாமல் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளீர்கள் மோடி அவர்களே. மக்கள் சக்தியே இல்லாத கட்சிகளை மிரட்டி 2029 வரை சொகுசுபயணம் மேற்கொள்ள நினைக்கிறீர்களா? நேரடி மறைமுகம் என கூட்டணி வைத்தாலும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது. அதுபோல தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஒட்டுவார்கள் என விஜய் பாஜகவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். 

சரத்குமார் கடும் விமர்சனம்

அப்போது முதல் மாநாட்டில் பாசிசம், பாயாசம் என பேசிய விஜய், மதுரை மாநாட்டில் பாய்சன் என்று பேசினார். இதற்கு நடிகர் சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார். இன்று நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்த சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தவெக தலைவர் விஜய்க்கு பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா? மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லும் அளவிற்கு விஜய் இன்னும் வளரவில்லை. எதை பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம், யாரை பற்றி பேசுகிறோம் என்பதில் கவனம் இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

Continues below advertisement

நடிகர் சரத்குமார் கடந்த 2007இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த மக்களவை தேர்தலின் போது பாஜகவுடன் இணைத்தார். பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவி ராதிகா விருதுநகரில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் மாநாட்டில் விஜய் பேசியதற்கும் கடுமையாக விஜய்யை சரத்குமார் தாக்கி பேசியிருந்தார்.