தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சரத்குமார். இவரின் மகளும் நடிகையுமான வரலட்சுமிக்கு நிகோலாய் சச்தேவ் என்பவருடன் கடந்த ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 


 



திருமணம் மட்டுமின்றி திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்களான மெஹந்தி, ஹல்தி பங்க்ஷனும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வெளிநாட்டில் திருமணம், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் என மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற வரலட்சுமியின் திருமணத்துக்கு கோடி கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டது என சில தகவல்கள் சோசியல் மீடியா எங்கும் பரவி வந்தன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் அவர் கலந்து கொண்ட அரசியல் பிரச்சாரத்தின் போது பேசி இருந்தார் நடிகர் சரத்குமார்  


இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணியை சேர்ந்த பாமக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சரத்குமார்.


 



அப்போது தன்னுடைய மகள் வரலட்சுமி திருமணம் குறித்து பேசுகையில் ”என்னுடைய மகள் திருமணத்துக்கு நான் 800 கோடி ரூபாய் செலவு செய்ததாக யூடியூப்பில் செய்தியை பரப்பி வருகிறார்கள். அது எங்கே இருக்கிறது என எனக்கே தெரியவில்லை. எனவே அது முற்றிலும் தவறான கருத்து. தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.


இன்னைக்கும் என்னோட வயது 35. சாரி வயதை தப்பாக சொல்லிவிட்டேன். ஆனால் இந்த வயதிலும் நான் திடமாக இருக்கிறேன் என்றால் சுத்தமான பழக்கவழக்கங்கள் தான் அதற்கு காரணம். வீடு வீடாக பேப்பர் போட்டு வளர்ந்தவன் நான். உங்களால் வளர்க்கப்பட்டவன். இப்போது விட்டால் கூட நான் மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்வேன். இன்றைய இளைஞர்கள் குடி, கஞ்சா போன்ற போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்த அரசு” என பிரச்சாரத்தின் போது பேசி இருந்தார் சரத்குமார்.