நடிகர் சரத் பாபு இறந்துவிட்டதாக வெளியான தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அவரது சகோதரி கூறியுள்ளார். மேலும், அவர், ”எனது அண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” என கூறியுள்ளார். நடிகர் சரத்பாபு ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் மறைந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதையடுத்து நடிகர் சரத்பாபுவின் குடும்பத்தினர் அவரது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு, சினிமாக்களில் 70-களில் தொடங்கி முன்னணி நடிகராக விளங்கியவர் நடிகர் சரத்பாபு. 1951ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தார். 1973-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் 1977-ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு, ஒரு புறம் கதாநாயகனாகவும் மற்றொருபுறம் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நிழல் நிஜமாகிறது படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். மேலும் இந்தியா முழுவதும் பெரும் ஹிட் அடித்த ‘ஏக் துஜே கேளியே’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘மரோ சரித்ரா’ மற்றும் சலங்கை ஒலி உள்பட தன் தொடக்க காலத்தில் பல படங்களில் நடிகர் கமல்ஹாசனுடன் சரத் பாபு நடித்துள்ளார்.
ரஜினிகாந்துடன் அசத்தல்:
மற்றொருபுறம் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து என சூப்பர் ஹிட் படங்களில் நண்பராகக் கலக்கி, ரஜினி, கமலின் நண்பர் பாத்திரம் என்றால் இவர்தான் என ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சரத்பாபு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும், முக்கிய இயக்குநர்களின் படங்களிலும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சரத்பாபு நடித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
சினிமாவில் அவ்வப்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சரத்பாபு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இறுதியாக தெலுங்கில் பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்திலும் தமிழில் டாக்டர் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சரத்பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் 71 வயதாகும் சரத்பாபு உடல்நலக்குறைவால் இறந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என அவரது சகோதரி கூறியுள்ளார்.