இந்தியாவைப் பொறுத்த மட்டில் கல்விக்கு மிகுந்த முக்கியம் அளிக்கும் நாடாகும். குறிப்பாக, தமிழ்நாட்டில் கல்வியானது கடவுளை விட உயர்ந்ததாகவே மக்கள் கருதுகின்றனர். அதன் காரணமாகவே செய்யும் தொழிலையும், கல்வியையும் போற்றும் ஆயுத பூஜையை சரஸ்வதி பூஜையாகவும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.


இந்தியாவிலே உள்ள ஒரே ஒரு சரஸ்வதி கோயில்:


ஆயுத பூஜையை முன்னிட்டு கோயில்களில் காலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டாலும் கல்வியின் தேவியாக கருதப்படும் திருவாரூர் கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி தேவியின் கோயிலில் காலை முதலே பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்தியாவிலே சரஸ்வதி தேவிக்கு என்று அமைந்துள்ள ஒரே கோயில் இந்த கோயில் மட்டுமே ஆகும்.


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கூத்தனூர். கூத்தனூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த சரஸ்வதி கோயில். ஒட்டக்கூத்தன் என்ற கவிஞர் சரஸ்வதி தேவியை வணங்கி அவரது அருள் பெற்ற ஊர் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் இந்த ஊருக்கு வந்ததாகவும், சரஸ்வதி தேவியின் பெருமையைப் போற்றும் விதமாக இந்த ஊரில் சரஸ்வதி தேவிக்கு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.


குழந்தைகளுடன் பெற்றோர்கள் தரிசனம்:


கல்வியின் தேவியாக போற்றப்படும் சரஸ்வதி தேவிக்காக கட்டப்பட்டுள்ள கோயில் என்பதால் பள்ளிக்கு சேர்வதற்கு முன்பாக குழந்தைகளை பெற்றோர்கள் இங்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்யும் வழக்கமும் உண்டு. இன்று சரஸ்வதி பூஜை என்பதால் காலை முதலே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.


இங்கு மட்டும் ஏன் கோயில்?


சரஸ்வதி தேவியின் கணவனான படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு சில காரணங்களால் கோயில்கள் இருக்காது என்றும், அவரை யாரும் வணங்கமாட்டார்கள் என்றும் புராணங்களில் கூறப்படுகிறது. தனது கணவனுக்கே கோயில் இல்லாத காரணத்தால் தனக்கும் எந்த தனி கோயிலும் இருக்கக்கூடாது என்று சரஸ்வதி தேவி முடிவு செய்தார். இதன் காரணமாகவ அவருக்கு எங்கும் கோயில்கள் இல்லை என்று புராணங்கள் கூறுகிறது.


அதேசமயம் ஒட்டக்கூத்தனின் பக்தியை மெச்சிய காரணத்தால் கூத்தனூரில் மட்டும் சரஸ்வதி தேவிக்கு என்று தனி ஆலயம் உருவாகியதாக கோயில் புராணங்கள் கூறுகிறது.  


பிரம்மாவிற்கு கோயில் இருக்கக்கூடாது என்று புராணங்களில் சாபமிட்டதாக கூறப்பட்டாலும் இந்தியாவில் சில இடங்களில் பிரம்மாவிற்கு கோயில் உள்ளது. கும்பகோணத்தில் பிரம்மா தனது மனைவிகளான காயத்ரி மற்றும் சரஸ்வதி தேவியுடன் காட்சி தரும் கோயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.