கோயில்களுக்கு செல்வது தொடர்பாக தன்னை விமர்சிக்கும் இணையவாசிகளுக்கு நடிகை சாரா அலிகான் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் சைஃப் அலிகானின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நடிகையாக சாரா அலிகான் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு அவரின் முதல் படமாக கேதர்நாத் வெளியானது. இந்த படத்தில் தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக சாரா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் சிம்பா, அன்பு ஆஜ் கல், கூலி நம்பர் 1, அத்ராங்கி ரே, கேஸ்லைட், சாரா ஹட்கே ஜரா பச்கே ஆகிய படங்களில் சாரா அலிகான் நடித்துள்ளார்.
இதில் அட்ராங்கி ரே தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் நடிகர் தனுஷூம் நடித்திருந்தால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே சாரா அலிகானுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
இதனிடையே அடிப்படையில் இஸ்லாமியரான சாரா அலிகான் கடந்த 2020 ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் கோயிலில் தீப வழிபாடு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் சில இந்து கோயில்களில் பிற மதத்தினர் நுழைய தடை உள்ளது. அதனால் சாரா அலிகான் செயலுக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதேபோல் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலுக்கு சென்றார் நடிகை சாரா அலிகான். அங்கு தனது தாயாருடன் அவர் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதுவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமீபத்தில் கேதார்நாத்துக்குச் சென்றார். இப்படியான நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சாரா, தன் மீதான விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார்.
அதில், “மக்கள் தங்களை எது மகிழ்வித்தாலும் அதை பழக்கமாக கொண்டுள்ளனர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது எனது தனிப்பட்ட நம்பிக்கை. நான் எந்த பக்தியுடன் பங்களா சாஹிப் அல்லது மகாகாலேஷ்வர் செல்வேனோ அதே பக்தியுடன் அஜ்மீர் ஷெரீப்புக்கும் செல்வேன். தொடர்ந்து செல்வேன். மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்’ என தெரிவித்துள்ளார்.