நடிகர் விஜய் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயின் லியோ படத்தில் நடித்து வரும் நடிகர் சஞ்சய் தத் விஜய்க்கு டிவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து பதிவு லைக்ஸ்சை குவித்து வருகிறது. சஞ்சய் தத் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது : ”சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ’லியோ’ படத்தின் வெளியீட்டை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் லியோ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பு டான்ஸ், பாடல் உள்ளிட்ட திறமைகளின் மூலம் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மின்னுகிறார். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாகுபாடின்றி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவரின் பிறந்தநாளையொட்டி, ரசிகர்களின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களிலும், இன்ஸ்டா ஸ்டோரிகளிலும் பேஸ் புக் பதிவுகளிலும், டிவிட்டரிலும் விஜய்யின் வாழ்த்து செய்திகளே ஆக்கிரமித்துள்ளன.
இது ஒரு புறம் இருக்க விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், போஸ்டர்கள் ஒட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு விஜயின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடுக்கடலில் விஜய்க்கு பேனர் வைத்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் காந்தி சிலை பின்பு வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயின் பேனர் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள், ஆர்வமிகுதியில் நாளைய முதல்வரே என பல்வேறு இடங்களில் விஜயின் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.