இயக்குநருமான, நடிகருமான சமுத்திரகனியின் படைப்பில் வெளியாகி ரசிகர்களை பெரும் வரவேற்பை பெற்ற ‘அப்பா’ படம் இன்றோடு 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
படம் அல்ல பாடம்
இயக்குநரும்,நடிகருமான சசிகுமார் தயாரித்த இந்த படத்தை எழுதி, இயக்கியதோடு மட்டுமல்லாமல் முதன்மை கேரக்டரில் நடிக்கவும் செய்திருந்தார் சமுத்திரகனி. அதுமட்டுமல்லாமல் தம்பி ராமையா, நமோ நாராயணன், காக்கா முட்டை விக்னேஷ் ,நசத், கேப்ரியல்லா, வினோதினி, வேல ராமமூர்த்தி,ராகவ்,யுவஸ்ரீ லட்சுமி, அனில் முரளி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கவிஞர்கள் பா.விஜய், யுகபாரதி, நடிகர் சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் வந்தனர். இளையராஜா இசையமைத்த அப்பா படம், ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பாடமாக அமைந்தது.
படத்தின் கதை
ஒவ்வொரு பிள்ளைகளின் எதிர்காலமும் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை. அது பெற்றோரின் கையில் இருக்கிறது என்பதை அழகாக உணர்த்தியது இந்த படம். மகனின் திறமையை அறிந்து அவன் விருப்பப்படி வளர்க்க வேண்டும் என்ற அப்பாவாக சமுத்திரக்கனி, தனது எண்ணத்தின் படி மகனை படிக்க வைத்து அமெரிக்கா சிட்டிசன் ஆக்க வேண்டும் என்ற தந்தையாக தம்பி ராமையா, தன் மகனின் திறமையை அறியாமல் இருக்கிற இடம் தெரியாமல் வளர வேண்டும் என நினைக்கும் அப்பாவாக நமோ நாராயணன் என இப்படம் மூன்று விதமான அப்பாக்களையும், அவர்களின் குடும்ப நிகழ்வுகளையும் பேசியது.
கருத்து சொல்லிய காட்சிகள்
மேலும் குழந்தைகளின் பதின்ம வயது உணர்ச்சிகள், தன்னபிக்கை ஊட்டுவது, அவர்களின் விருப்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல அனுமதிப்பது என காட்சிக்கு காட்சி அப்பா பெற்றோர்களுக்கு பாடம் சொல்லியது. சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும், ஓவர் டோஸ் ஆக அமைந்த வசனங்களும் இருந்தாலும் அப்பா பணம் அனைத்து உயர்நிலையும் கவர்ந்திருந்தது.
தனியார் பள்ளிகளில் கட்டாயப்படுத்தி கல்வி கற்க வைப்பது, படிக்க வேண்டும் என்பதற்காக மற்ற செயல்களுக்கெல்லாம் ஊர்வலம் நடத்துவது என இன்னொரு முகத்தை வெட்ட வெளிச்சமாக காட்டியது. கடைசியாக என்ட்ரி கொடுக்கும் சசிகுமாரின் நட்பை இந்த சமூகத்திற்கு மிகப் பொருத்தமான ஒன்று.
இளையராஜாவின் இசையும் இந்த படத்திற்கு பெரிய அளவில் கை கொடுத்திருந்தது. இப்படி சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சரியான விதத்தில் சொல்லி இருந்து பாராட்டு மலையில் நனைந்த அப்பா படம் இன்றோடு 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதேசமயம் அப்பா படத்தின் கதை தனது மகனுக்குப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் போது நடந்த உண்மைச் சம்பவத்திலிருந்து எடுக்கப்பட்டதாக சமுத்திரக்கனி தெரிவித்திருந்தார்.