தமிழ் சினிமாவில் சமூகத்தை சார்ந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் திரைப்படம் மூலம் சமூகத்தை சீர்திருத்தும் நல்ல நோக்கத்துடன் பல அவலங்கள் குறித்து வெளிப்படையாக பேசப்படுகிறது. அந்த வகையில் கந்துவட்டி கொடுமைகளை மையமாக வைத்து இயக்குநர் சீயோன் ராஜா இயக்கிய திரைப்படம் 'பொதுநலன் கருதி'. அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் 'சமூக விரோதி'. 



சீயோனா பிலிம் பேக்டரி நிறுவனத்தின் கீழ் சீயோன் ராஜா திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'சமூக விரோதி'. பிரஜின், நாஞ்சில் சம்பத், வனிதா விஜயகுமார், கஞ்சா கருப்பு, முத்துராமன், தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிஜு மோன் ஒளிப்பதிவு செய்ய மலாக்கி இசையமைத்துள்ளார். 


இன்று சமூகத்தில் வேலையின்றி  வறுமையில் பணத்தேவையில் தவிக்கும் இளைஞர்களை எப்படி சமூக விரோத செயல்களில் திட்டமிட்டு ஈடுபடுத்துகிறர்கள், அவர்கள் எப்படி போதைக்கு அடிமையாகிறார்கள், அவர்களை இது போன்ற செயல்களில் ஈடுபட யார் வழிநடத்துகிறார்கள் என்பதை ஒரு கற்பனை கதையாக அமைத்துள்ளார் இயக்குநர் சீயோன் ராஜா. 
 
சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இப்படத்தில் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்து தணிக்கை குழு பார்த்து அதற்கு சான்றிதகள் வழங்குவதற்கு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. முழுப்படத்தையும் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் தணிக்கை சான்று தர மறுத்துவிட்டார்கள். அதற்கான சரியான காரணம் எதையும் சொல்லாமல் கிராபிக்ஸ் பயன்படுத்தி ஒரு கதாபாத்திரத்தில் தாடியை மட்டும் நீக்க சொல்லி சொன்னார்கள். ஆனால் ஏன் அப்படி செய்ய வேண்டும் என சொல்லவில்லை. கிராபிக்ஸ் பயன்படுத்தி சரி செய்த பிறகு தான் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்பதை சொல்ல முடியும் என தணிக்கை குழு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறியுள்ளார் இயக்குநர் சீயோன் ராஜா. 


மேலும் இந்த விஷயம் குறித்து சீயோன் ராஜா கூறுகையில், இன்றைய இளைஞர்கள் தவறான வழியில் போய்விடக்கூடாது என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம்தான் என்றும் இதன் மூலம் எந்த ஒரு தனிப்பட்ட நபரை தாக்கியும் எடுக்கப்படவில்லை. ஒரு நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு தணிக்கை குழு ஏன் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்? உண்மையிலேயே அவர்கள் சரியான வரைமுறையை தான் பயன்படுத்துகிறார்களா? என பல கேள்விகளுக்கு விடையே தெரியவில்லை. 


சமூகத்தில் நடக்கும் அவலங்களை தான் சினிமா  பிரதிபலிக்கிறது. அப்படி இருக்கையில் இதுபோன்ற முட்டுக்கட்டைகள் வருத்தத்தை கொடுக்கிறது. அதனால் வேறு வழியின்றி படத்தை மறுதணிக்கை செய்ய முடிவு செய்து அதற்காக விண்ணப்பித்துள்ளோம் என தெரிவித்து இருந்தார் சீயோன் ராஜா.