தனது விவாகரத்திற்கு பிறகான வாழ்க்கையை மிகவும் நேர்மறையாக அணுகி வருகிறார் நடிகை சமந்தா. தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பிரபல ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சாந்த ரூபன் இயக்கவுள்ளார்.
பெண்ணை மையப்படுத்தியே இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளது. இது தவிர பாலிவுட் படத்திலும் சமந்தா காலடி பதிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளது. தமிழில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி , இவருக்கு சொந்தமாக Outsiders Films என்னும் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இவரது தயாரிப்பில் விரைவில் பெண்ணை மையமாக வைத்து அழுத்தமான கதை ஒன்று இந்தியில் உருவாக உள்ளதாம், அந்த படத்தின் மூலமாகத்தான் சமந்தா பாலிவுட்டில் முதல் முறையாக கால் பதிக்கவுள்ளார்.
ஏற்கனவே ஃபேமிலி மேன் 2 திரைப்படம் மூலமாக பாலிவுட் வெப் சீரிஸில் நடித்திருந்தார். ஆனால் அதில் இலங்கை தமிழ் பெண்ணாகவே வலம் வருவார். ஆனால் தற்போது இந்தி மொழியில் சரளமாக பேசி நடிக்கவுள்ளார். ஆனால் இம்முறை வெப் சீரிஸ் அல்ல முழு நீள திரைப்படம். அவர் தனது திறமையை பாலிவுட் பக்கமும் வெளிப்படுத்துவதற்கான ஸ்கோப் உள்ள படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பொதுவாக திரையில் இரண்டு முன்னணி நாயகிகள் தோன்றுவது அவ்வப்போது நடக்க கூடிய் விஷயம்தான் ஆனால் முன்னணி நாயகி தாயாரிப்பில், மற்றொரு முன்னணி நாயகி நடிப்பது இதுவே முதல் முறை. டாப்ஸி மற்றும் சமந்தா கூட்டணி இணையும் புதிய பாலிவுட் படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இது ஒரு புறம் இருக்க பிரபல இயக்குநர் அட்லீ , ஷாருக்கானை வைத்து இயக்கும் புதிய படத்திலும் சமந்தா ஒப்பந்தமாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஷாருக்கானை இயக்குவதன் முதல் முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் அட்லீ. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவர் சில தனிப்பட்ட காரணங்களால் படத்திலிருந்து விலகிவிட்டாராம். இதனால் ஷாருக்கானுக்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என கூறப்படுகிறது.